Thursday, November 26, 2009

பாவம் கோடா! விழுந்தது கோடாலி!

இந்த மது கோடா ரொம்ப பாவம் அண்ணாச்சி! ஊரு உலகத்துல யாரு பண்ணாத தப்ப பண்ணிப்புட்டாறு? அவுரு மேல இம்புட்டு கேசு போட்டு அவுர இம்ச பண்றாங்க!


என்னடா இது? நீ எதுவும் அவுரு கிட்ட கமிஷன் கிமிஷன் வாங்கி போட்டுட்டயா?


மது கோடா எனக்கு எதுக்கு அண்ணாச்சி கமிஷன் குடுப்பான். குடுக்க வேண்டியவங்களுக்கு சரியா குடுக்கலயோன்னு தான் அண்ணாச்சி சந்தேகம் வருது.


என்னடா ஒளர்ற! அவன் கமிஷன் குடுக்காம தான் மாத்திக்கிட்டான்னு சொல்றியா!



நான் என்னண்ணே சொல்றது. பாத்தாலே புரியுதுண்ணே. ஒரு விஷயம் சொல்லுவாங்க அண்ணே. கைல கத்திய வச்சிக்கிட்டு பயமுறுத்தர வரைக்கும் தான், பவரு, வருமானம், தல மேல போட்டு வெட்டிட்டா அப்புறம் சிக்கல்தான்னு.


என்னடா சொல்ற புரியலையே.


ரொம்ப சுளுவுன்னே. மெட்ராஸ் பாஷையில சொல்லணும்னா, ஊடு கட்டிக்கிட்டே இருந்தா தான் நம்ம கையிலே கன்ட்ரோலு இருக்கும். பாருங்க, பேர சொல்ல வேண்டாம், ஒரு ஆளு கொஞ்சம் ராங்கா சைடு உதார மாதிரி தெரிஞ்சிச்சு. உடனே அங்க இங்கன்னு ரெய்டு உட்டு, சைடு கரெக்டு பண்ணிட்டாங்கல்ல.


நீ என்ன சொல்ல வர?


நான் என்ன சொல்றேன்னா, மது கோடா கணக்கா பேமானிங்க, இந்திய அரசியல்ல ஆயிரக்கணக்கா இருக்காங்க. நான் மொதல்ல சொன்ன மாறி, மாத்த ரெண்டு சட்ட இல்லாம ஊர வுட்டு பொழப்பு தேடி நகரத்துக்கு வந்தவங்க புள்ளைங்க இப்ப ஃபாரின்ல படிக்குதுங்க. சொத்து ரெண்டு கோடின்னு கணக்கு காட்டறான். என்னோட கேள்வி, அந்த ரெண்டு கோடி கூட எங்கேருந்து வந்திச்சுங்கரதுதான். பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு, நேர்மையான, புத்திசாலியான மக்க, மாசத்துக்கு இருபது முப்பதாயரம் சம்பாதிக்கரதுக்குள்ள டங்குவாரு அறுந்து போவுது. இப்படி இருக்கயில எலிமெண்டரி ஸ்கூலு தாண்டாம, பத்து பைசா இல்லாமா, என்ன வேல பாத்து, என்ன தொழில் பண்ணி இவுனுங்க கோடில பொரளுறானுங்க. எனக்கு புரியலண்ணே, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அத நம்ம எலெக்ஷன் கமிஷன், இன்கம் டாக்சு, எல்லாம் எப்டி ஒத்துக்குது?


மது கோடா மட்டுமில்ல, இப்ப நம்ம நாட்டுல, பாதி அரசியல் வியாபாரிங்க, மது கோடாவுக்கு கொஞ்சமும் கொரஞ்சவுங்க இல்ல. ரூல சரியா போட்டு வலைய ஒழுங்கா விரிச்சா, மவனே ஒரு பய தப்ப மாட்டான். முடியாதா! மது கோடா ஒரு ஆளு என்ன பாவம் செஞ்சான். அவுனையும் மன்னிச்சு வுட்டுருங்கோ.








Sunday, November 15, 2009

மது கோடாவின்


யாரிடம் சென்று முறையிடுவது

கலைஞர் கருணாநிதி, எக்காலமும் நெஞ்சுக்கு நீதி தேடும், பகுத்தறிவுப் பாசறையின் தானைத்தலைவர், புலம்பித் தவிக்கிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'யாரிடம் சென்று முறையிடுவது'? என்று. நல்ல கேள்வி, அய்யா, நல்ல கேள்வி. யாரிடம் சென்று முறையிடுவது?



ஆனால் இந்த கேள்வியும் அதனுடன் கூடிய புலம்பலும், தங்கள் அரசின் கையாலாகாத் தனத்தைத் தான் தெளிவாகத் தெரிவிக்கிறது. இது போன்ற விஷயங்களில், நியாயமும், தெளிவான தொலை நோக்குப் பார்வையும் அவசியம் தேவை.



நியாயம் அல்லது நீதி என்ற சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள்? எதுவெல்லாம் பதவிகளைத் தக்க வைக்கின்றனவோ, எதுவெல்லொம் தங்கள் எல்லா மனைவிகளின் எல்லா செல்வங்களுக்கும் செல்வம் சேர்க்க வழி அமைக்கின்றனவோ, அவர்கள் மட்டுமல்லாது மற்றும் பல உறவினர்களுக்கும், பதவிகள், அதனுடன் சேரும் செல்வங்கள் சேர்க்க வழி செர்க்கின்றனவோ அவைகளே நீதிகள், நியாயங்கள். மறந்து விடாதீர்கள் கலைஞரே! சில மாதங்களுக்கு முன், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பதவிகள் வேண்டி பிரதமர் முன் மண்டியிடுவதில் மும்முரமாக இருந்த பொழுது இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் இதையே தான் கேட்டார்கள் - "யாரிடம் சென்று முறையிடுவது? தமிழனின் காவலர்கள் என்று பறை சாற்றுபவர்கள் பதவிகளுக்காக மண்டியிட்டு நிற்கும்போது, நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று. இன்று இப்பொழுது இது உங்கள் முறை. ஆனால் உங்கள் புலம்பலுக்கு ஒரு அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.


தொலை நோக்குப் பார்வை. தொலை நோக்குப் பார்வை உங்களுக்கு நிச்சயம் உண்டு. எந்த விஷயங்களில் என்பது தான் கேள்வி. தங்களைப் போலவே பகுத்தறிவுப் பாசறையில் பிறந்து, தங்கள் காலத்தையும், முயற்சிகளையும், ஒரு எண்ணத்தொகுப்பின் மையமாக வைத்து, ஒரு சமுதாயக் குறிக்கோளுடன் தியாகங்கள் பல செய்து, அதற்கு ஈடாக எதுவுமே பெறாத பற்பல சிந்தனையாளர்கள், செயல் வீரர்கள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் தொலை நோக்கு வெறும் இயக்கமும், சமுதாயம் சார்ந்ததுவாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் உங்கள் தொலை நோக்கோ பறந்து விரிந்த குடும்பம் சார்ந்தது. அந்த வகையில் நீங்கள் ஒரு சாதனையாளர்தான்.



இன்றைய புலம்பல் ஒரு ஆரம்பம் தான். கையாலாகாத்தனத்தின் ஒரு சிறிய வெளிப்பாடு. காலம் உருள உருள, உங்கள் வயது ஏற ஏற, கையாலாகாத்தனங்கள், அதற்குண்டான நிலைமைகள் மேலும் வளரும். உங்கள் தம் புலம்பல்களின் பெருக்கங்களுடன், நெஞ்சுக்கு நீதி ஒரு நாள் நிச்சயம் கிட்டும். நெஞ்சுக்கு நீதி கிடைக்கும் வரை நீண்ட வாழ்வு நீங்கள் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Thursday, November 12, 2009

தகுதியான இடத்துக்குத் திரும்பினான் மனு ஷர்மா

கண்ணா! நேத்து ஜெயிலுக்கு திரும்பிப் போறதுக்கு முன்னாடி மனு அவன் அம்மாவுக்கு உருக்கமா கடிதம் எழுதியிருக்கான் பாத்தியா?


என்னம்மா எழுதியிருக்கான்?



நான் எந்த தப்பும் பண்ணல, நீங்க என்ன நம்புங்கம்மான்னு! படிக்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா.


நீங்க எதுக்கும்மா மனசு கஷ்டப்படறீங்க?


அப்பாவியா இருப்பானோன்னு மனசு சங்கடப்படுதுப்பா? காந்தி கூட சொல்லியிருக்காரு, நூறு குத்த்தவாளி தப்பிச்சாலும், குத்தம் செய்யாதவன் யாரும் தண்டிக்கப்படக்கூடாதுன்னு.


இந்தியாவுல ஒரு நிதர்சன உண்மைய புரிஞ்சுக்கோம்மா.
  • ஒரு ஏழைக்குத்தவாளி நிச்சயம் பிடிபடுவான் மற்றும் தண்டிக்கப்படுவான்
  • ஒரு ஏழை குத்தம் செய்யாமலும் சந்தர்ப்ப வசத்தால் பிடிபடலாம், தண்டிக்கப்படலாம்
  • ஒரு பணக்கார குத்தவாளி பெரும்பாலும் பிடிபடாமலே போகலாம்.
  • ஒரு பணக்கார குத்தவாளி பிடிபட்டாலும் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் போகலாம்.
  • ஒரு பணக்காரன் குத்தம் செய்யாமலே பிடிபடவோ, தண்டிக்கப்படவோ வாய்ப்போ இல்லை.
  • அதுவும் அரசியல்வாதியின் பிள்ளை, இந்த குற்றத்தில் மாட்டி தவிர்க்க முடியாமல் உள்ளே போனான்னா, இதுக்கு முன்னே பற்பல குற்றங்கள் செய்து, கண்டுபிடிக்கப்படாமலே அல்லது, தண்டிக்கப்படாமலே போயிருப்பான். இது சத்தியம்.



Tuesday, November 10, 2009

உயர் சமூகம், அதன் கேடுகெட்ட உறுப்பினர்கள்

மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதியது:

வினோத் ஷர்மா என்பவன் ஒரு முன்னாள் ஹரியானா மாநில அமைச்சர். அவனோட தறுதலை பிள்ளை மனு ஷர்மா. நண்பர்களுடன் உயர் விலை கார்களில் ஊர் சுற்றுவதும், நாளையும் இரவையும், மதுவுடனும், தரம் கெட்ட மாதர்களுடனும் போக்குவதுதான் இது போன்ற பல உயர் வகுப்பு, பொருளாதாரத்தில் உயர் வகுப்பு தருதலைப்பிள்ளைகளின் பொழுதுபோக்கு.




அது போன்றே ஒரு இரவு திரிந்து அலைந்தவன், ஜெச்சிக்கா லால் என்பவளை சுட்டுக்கொன்றான். அவனுடன் கூடவே இருந்தனர் அமரீந்தர் சிங், அவனுடைய நண்பன் ஆலோக் கன்னா மற்றும் விகாஸ் யாதவ். இதில் விகாஸ் யாதவ் என்பவன் உத்தர் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினரின் தறுதலை மகன்.




இக்கொலைக்கு பிறகு, வேறு வழியில்லாமல் மனு போலீசில் சரணடைந்தான். கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தான். பின்னர் தனக்கும் ஜெஸ்ஸிகா லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். தருதலைப்பிள்ளையின் தரம் கெட்ட அப்பன் சாட்சியங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தான். பிடி பட்டான். தன் அமைச்சர் பதவியை விட்டு விலகினான்.



கொலையாளிக்கு வாதாட விலை உயர் சட்ட நிபுணர்கள். அவனுக்காக வாதாடியது மட்டுமல்லாமல் தரம் கெட்டு பதப்பித் திரிந்தார்கள். மக்கள் முட்டாள்கள் என்றனர். குற்றத்தை திசை திருப்ப முயற்சித்தனர். கேடு கெட்ட காவலர்கள் துணை போனார்கள்.



ஷயன் முன்ஷி என்பவன் கொல்கத்தாவில் ஒரு கண்மருத்துவரின் மகன். உயர் தர பள்ளிகளில் பயின்றவன். கொலையை நேரில் பார்த்தவன். முதலில் பார்த்ததாகச்சொன்னவன், பிறகு மாற்றி மாற்றி பேசினான். பெண்டாட்டியுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றான். விமான மையத்தில் பிடி பட்டான்.



காவலர்கள் சோரம் போனார்கள். வழக்கறிஞர்கள் உண்மை அதாவது அன்னையை விற்கத் துணிந்தார்கள், காசுக்காக. நீதிபதிகள் தடுமாறினார்கள். பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரத்திற்கு பயந்தார்கள். மக்களும், பத்திரிக்கை உலகமும் வெகுண்டு எழுந்தனர். மனு ஷர்மா ஆயுள் தண்டனை பெற்றான். அவன் நண்பர்கள், கொலைக்கு உடந்தையானவர்கள் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.



வினோத் ஷர்மா, தருதலைப்பிள்ளையின் கேடு கெட்ட தந்தை இன்னமும் அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டுதானிருப்பான் என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் எதுவும் சாத்தியம்.

Monday, November 9, 2009

பாரோலில் வெளி வந்தான் கொலைகாரன்

கொலை காரன் மனு ஷர்மா இரண்டு மாத பாரோலில் வெளியே வந்தான். காரணம் அவன் தாய் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.


அவள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது இப்பொழுது அல்ல என்பது அவளது சனிக்கிழமை வீடியோ படத்தைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ஓட்டலில் ஒரு பிரெஸ் கானஃபிரென்ஸில் மிகவும் தெம்பாகக் கலந்து கொன்டிருந்திருக்கிறாள்.



பின்னே அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது எப்போது? ரொம்ப சுலபான பதில். அவள் நோய் வாய்ப்பட்டிருந்தது கொலைகாரன் மனு ஷர்மாவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தபோது. அந்த ஒன்பது மாதங்கள் அவள் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தாள். எதிர்காலக் கொலைகாரனை, ஒரு சட்ட விரோதியை வயிற்றில் சுமப்பது என்பது கடுமையான வியாதி அல்லவா.



செய்த பாவங்கள் போதாது என்று மேலும் பாவங்கள் செய்ய வெளி வந்திருக்கிறான், பொய் பாரோலில். ஒரு கொலைகாரப் பாவியை வயிற்றில் சுமந்ததற்காக அந்த தாய் சமீப காலங்களில் ஒரு கேடு கெட்ட கொலைகாரனைப் பெற்ற குற்றத்தோடு துயர வாழ்க்கை வாழ்வது உண்மை. இதற்கு மேலும் அவன் குற்றம் செய்தால், அத்தாயே அவனை செய்யத்தூண்டினால், அவளுக்கு வரக்கூடிய துயரம் மிக அதிக அளவில் இருக்கும். அது இயற்கையின் நியதி. அதை யாராலும் தவிர்க்க முடியாது.


ஷீலா தீக்ஷித் போன்றவர்கள் அதற்க்குத்துணை போனால் அவர்களும் பெரும் துயரத்தில் ஆழ்வது அவசியம். இது ஜோசியம் அல்ல. கொலையுண்டவளின் தாயின் வயிற்றெரிச்சல் அவர்களை சிதைக்காமல் விடாது. புராணங்களிலும், இதிகாசங்களிலும், இதற்கான உதாரணங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன.

Sunday, November 8, 2009

செத்தது மடிந்தது தமிழின உணர்வு

கடல் கடந்து சென்றான் தமிழன் கனவுகளுடன்
கால மாலை பார்க்காது உழைத்தான் வயிறு கழுவ
தாய் மண்ணை மறந்து, சென்ற இடம் தன்னிடமாக்கி
தான் தமிழன் என்று மறவாது, தமிழ் மட்டும் பேசி
அந்நிய மண்ணில் தமிழ் தழைக்க விரும்பினான்



மணம் முடித்து, குழந்தைகள் பல பெற்று வளங்கள்
மனம்போல் பெற்றான் பற்பல - பொறுக்காத சிங்களவன்
பாவங்கள் பல புரிந்தான், தமிழ் மாதர் தம் குலத்தை
பரிதவிக்க விட்டு காட்டாட்ச்சி நடத்தினான்.


ராஜபக்சே என்னும் கொடுங்கோலாளன் தருணம்
பார்த்து அரங்கேற்றினான் ஒரு நாடகத்தை
விடுதலைப் புலிகளை முடிக்கிறேன் என்ற பெயரில்
நடத்தி முடித்தான் தமிழ் குல வேரறுப்புச் செயல்


தமிழ்க் குலக் காவலெரன, நாள் தோறும் மேடை போட்டு தன்மானத் திரையில் நாடகம் போட்டு ஏமாற்றினார்கள் தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள்.


குளிர்சாதனப் பெட்டிகளும், ஒன்றுக்கும் மேலான துணைவியாரும் சுற்றிருக்க சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்குமிடையே உண்ணா நோன்பு இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் வியாபாரம் செய்தார்கள்


கூடிய விரைவில் எதிர் பாருங்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தமிழ் நாட்டில் அண்ணா விருது, பெரியார் விருது போல், கலைஞர் விருது கொடுத்து விழா எடுப்பார்கள். தமிழனுக்கு எதையும், எந்த கண்றாவியையும் தாங்கும் இதயம் உண்டு.

Friday, November 6, 2009

தலை விதி - இறந்தார்

சுமித் பிரகாஷ் வர்மா, அவரோட தலை விதி, ஆஸ்பத்திரிக்குள்ள போறதுக்குள்ள செத்துட்டாரு. அதுக்கு மன்மோகன் அண்ணாச்சி என்ன பண்ணுவாரு பாவம்? எதுக்கு தான் தலைவருங்கள குத்தம் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு!


விஷயம் ஒரு உயிர் போனது மட்டுமில்ல தம்பி. இன்னிக்கு இந்த வி.வி.ஐ.பி ங்களுக்காக, ஊரு ஊரா எவ்வளவு தடபுடல் நடக்குது, சாதாரண மனுஷங்களுக்கு எம்புட்டு சிரமம் னு யாருமே கவலை படறதில்ல. ஒனக்கென்ன, மாசம் பொறந்தா சம்பளம். தினம் தினம், நடந்தும், சைக்கிள்ளையும் போயி, அன்னாடம் சம்பாதிக்கரவங்கள நெனச்சு பாரு. இந்தியாவுல அது மாதிரி கோடிக்கணக்குல மக்கள் இருக்காங்க. அவனவன் டயத்துக்கு போயி வேல பாக்குலென்ன அன்னிக்கு ராத்திரி அவுங்க வூட்டுல எல்லோரும், அந்த ஒரு ராத்திரி சாப்பாடு கூட இல்லாம வவுறு காய வேண்டியது தான். ஊர்ல ஒரு தலைவன் வர்ரான்னா மொதல்ல அடிபடறது அந்த சாமானியனோட குடும்பத்துல இருக்கர்வுங்களோட வவுருதான். இதில என்ன வேடிக்கைன்னா அந்த சாமானியனோட ஓட்ட வாங்கித்தான், வெங்கங்கெட்டவனுங்க பதவிக்கே வரானுங்க.



தெருவுல, போற வர அரசாங்க பஸ்சு மேல, போராட்டங்கிற பேருல கல்லு வுட்ட பேமானி, அரசியல்ல பூந்து, தலைவரானதும், மக்கள் வரிப்பணத்த வள்ளலு மாதிரி எடுத்து ஊதுவான். தம்மானத்த வுட்டு, வயசு வித்தியாசம் கூட பாக்காம பன்னாடைங்க அவன் கால்ல வுளுந்து மோச்சம் கேக்கும். அவுனும் எடுத்து வுடுவான், சரி புடி, இந்த பதவிய, அந்த பதவியன்னு. அதோட நிக்கிதா, நேத்துவர சும்மா சோடா பாட்டுலும், சைக்கிள் செயினும் சுத்திக்கிட்டிருந்த பொறம்போக்கு, வி.வி.ஐ.பி. ஆவுறான். அவுனுக்கு பின்னாடி ஒரு போலீசு கூட்டம். ஒரு காலத்துல பல குத்தங்கள்ள அவன கைது பண்ண தேடிக்கிட்டிருந்த போலீசு, அவுனுக்கு பின்னே போயி அவுனுக்கு பாதுகாப்பு குடுக்குது. செலவுக்கு மக்களோட வரிப்பணம்.




மக்களோட வரிப்பணம்னதும், வெறும் வருமான வரி, அது ரொம்ப சம்பாதிக்கறவங்க தானே கட்டுறாங்க, நமக்கு என்ன ஆச்சுன்னு நெனைக்காத. அரிசி, பருப்புன்னு ஒவ்வொரு சாமான் நாம வாங்கரபோதும், நேரிடையாவோ, மறைமுகமாவோ வரி கட்டிக்கினு தான் இருக்கோம். இந்த வரியெல்லாம், இவுனங்களுக்கு பாதுகாப்பு குடுக்கவும், வளவு கட்டி வரவேற்பு குடுக்கவும், செலவாகுது. இவுனங்களுக்கு ஆகர ஆடம்பர செலவுல நம்ம ஒவ்வோத்தரோட ஒளைப்புல சம்பாதிச்ச பணமும் இருக்கு.

லட்சத்தில் ஒருவன்

அண்ணே! பாவம்ணே மது கோடா!


யாருடா, மது கோடா?? ஏன் அவனுக்காக பரிதாபப்படறே?


அதாண்ணே, முன்னால ஜார்கண்டுல மினிஸ்டராவும், அப்பால சீஃப் மினிஸ்டராவும் இருந்து இப்ப வயித்து வலி தாங்க முடியாம ஆஸ்பத்திரில இருக்காரே அண்ணே!


வயித்த்துவலின்னா ட்ரீட்மெண்டு குடுத்துடுவாங்க, அதுக்கு ஏன்டா பாவம், கீவம் னுகிட்டு.


அதுல்லண்ணே, ஹவாலா ஹிவாலான்னு இந்த சி.பி.ஐ. காரங்க உள்ள தள்ளிடுவாங்க போல இருக்குன்னே. அதனால காட்டியும், அவுருக்கு வயித்து வலி வந்திடிச்சு.



சரிடா, இந்த அளவுக்கு ஊழல் பண்ணியிருந்தா ஒரு நாள் இல்ல ஒரு நாள் மாட்டிக்க வேண்டியது தானே. இதுக்கென்னடா நீ பரிதாபப்படறே?


அதில்லண்ணே! இந்தியால எவ்ளோ பேரு இருக்காங்க. லட்சக்கணக்குல இருக்கும்ணே. ஒரு சின்ன பொட்டில ரெண்டு மாத்து டிரெஸ்ஸு கூட இல்லாம டவுன் பக்கம் வந்து, கூட்டத்தோட கல்லு உட்டு அடிச்சு, சாலை மறியல் பண்ணி, அரசியல்ல சேந்து, இப்ப மொத்த குடும்பமுமே, மாமா, மச்சான் சகல, கொளுந்தனாருன்னு எல்லாருமே கோடிகள்ள பொறண்டுகிட்டு இருக்காங்கன்னே. ஒவ்வொரு ஸ்டேட்டுலையும் கணக்கெடுத்த பல ஆயிரம் தேரும்ணே. அவுங்களையெல்லாம் தலைவர்கள்னு ஒத்துக்குட்டோம். அவுங்க மக்கள் வரிப்பணத்துல குடுக்கற அரிசிக்கும், கோதுமைக்கும், கலர் டி.வி.க்கும் கால்ல விழுந்து கும்பிடு போடறோம். இதெல்லாம் வாங்கிக்கிட்டு ஒட்டுகள விக்கிறோம். ஒரு கோடா ஏன்னா பொளச்சு போறாண்ணே. அவன் லட்சத்திலு ஒத்தண்ணே! பாக்கி தொண்ணூத்தி ஒம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்து ஒம்பெது பேரையும் அவுங்க மாமா, மச்சான், சகலங்களோட, கோளிய அமுக்கற மாதிரி அமுக்கி உள்ள தள்ளுனா, ரொம்ப சந்தோசப்படுவேன். இல்லாட்டி ஒரு கோடா என்னாண்ணே, பெரிய பெரிய ஜுஜுபில்லாம் அசால்ட்ட சுத்திக் கிட்டு இருக்காங்கண்ணே. ஆனா ஒரு விஷயம், ஊழல் பண்ற அரசியல் வாதி எல்லாரையும் ஒண்ணா அடைக்கறதுக்கு ஒரு திஹார் ஜெயில் பத்தாது.


Monday, November 2, 2009

வன்முறை இயக்கங்களின் கை ஓங்கல்

சென்ற வாரத்தொடர்ச்சி...........
"Self Motivation" அல்லது வலுவான "Motives" இன் ஆதாரத்தைப் பார்ப்போம். இதில் இணைவர்களில் பெரும்பாலோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் அன்றாடப் போராட்டங்களை நேரில் எதிர் நோக்கி வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்கள். படிப்பறிவையும், செயல் திறனையும் கொண்டு வாழ்க்கையில் பெரிய சாதனைகள் படைக்கத் துடிப்பவர்கள். இத்துடிப்புக்கு இடையே எது சரி, எது தவறு நியாயம், அநியாயம் என்ற விஷயங்கள், பெரும்பாலும் பெற்றோர்களால் பெருமளவு போதிக்கப்பட்டு, அவர்கள் கட்டுப் பாட்டில் வளர்பவர்கள். அவர்கள் சிந்தனைகளில் என்றும் ஆழ்ந்து வேரூன்றி இருப்பது, இது சரியா, தவறா, இது நியாயமா, அநியாயமா என்பதே. இந்த எண்ண அலைகளில் வேரூன்றி, அவர்கள் மனம் மிகவும் திடமாகவும், அதே சமயம் கடினமாகவும் ஆகிப் போகிறது.
தங்கள் கண்கள் முன்னே நடக்கும், அநியாயச்செயல்களைக் காணும்போது நெஞ்சம் பதைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் கண்டும் காணாதது போல் போகும்போது, அந்த பதைபதைப்பு வெறுப்பாகவும், மெல்ல மெல்ல வெறியாகவும் உருப்பெறுகிறது.
1960 களில் வந்த ஹிந்தி படம். மனோஜ் குமார் இயக்கி நடித்தது. அதில் அவர் பாடுவார்:
आदमी हूँ आदमी से प्यार करता हूँ! என்றும், அதாவது நான் மனிதன், மனித குலத்தை நேசிக்கிறேன் - மேலும் பாடுவார்: मै बसाना चाहता हूँ, स्वर्ग धरती पर, आदमी जिसमें रहे बस आदमी बनकर - அதாவது நான் இவ்வுலகத்தில் சொர்க்கத்தை படைக்க விரும்புகிறேன், அதில் மனிதன் மனிதனாக இருக்க விரும்பி.
இந்த எண்ணம் தான் ஆரம்பம். ஆனால் பெருவாரியான மக்கள், நெஞ்சில் உரமுமின்றி, சிந்தனைத்திறனுமின்றி, பம்மாத்து செய்து திரியும்போது வேதனை வெறியாகிறது. அப்பொழுது அவன் நினைப்பது:
"உன்னை வெறுக்கிறேன் நான்! ஏனென்று கேள் - நம் இனத்தை அளவுக்கு அதிகமாக காதலிப்பதால்"! இது ஒரு சிறிய ஆரம்பம்.