Sunday, May 27, 2012

இந்தியாவில் என்றாவது ஒருநாள் ......................... தொடர்ச்சி


இந்தியாவில் என்றாவது ஒருநாள் ......................... தொடர்ச்சி 
 
இந்திய அரசியல் வாதிகளின் ஊழல் பயணம், சுதந்திரம் பெற்று சில வருடங்களிலேயே துவங்கி விட்டிருந்தன. ஜவஹர்லால் நேரு 47 லிருந்து 64 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தார். அந்த வருடங்கள் உன்னத வாய்ப்புகளுக்கான வருடங்கள். அப்பொழுதும் சுதந்திர வேட்கையில் வீறு கொண்ட இளைஞர்கள் பலர், அறிவு முதிர்ச்சி அடைந்த முதியவர்கள் பலர் வாழ்ந்து வந்த காலம். ஆனாலும் நேருவுக்கு நாட்டை ஒரு சீரிய வழியில் கொண்டு செல்வதற்கான வேட்கையும், விவேகமும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பணக்காரத் தந்தை இறந்தவுடன், அவரின் சுயநலப் பிள்ளைகள் அவர் விட்டுச்சென்ற பொருட்களில் ஆசை கொண்டு சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு குடும்ப நிலை. சில வடஇந்திய மாநிலங்கள் (தற்போதைய உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான்) இன்னமும் சுதந்திரம் பெறுவதற்கான தயார் நிலையில் இருந்திருக்கவில்லை. மனித மேம்பாட்டில் மிகவும் பின் தங்கி இருந்தனர். ஜாதிப் பிரிவினைகள், பணக்காரன் - ஏழை இடையே பெரும் பிளவுகள், படிப்பறிவு, ஜனத்தொகை கட்டுப்பாடு, என்று எல்லா விதங்களிலும் பெரும் பின்னடைவு. இவற்றில் சில பல கண்றாவிகள் இன்னமும் வெகுவாகத் தொடர்கின்றன. எனினும் அதிக அளவு மக்கள் தொகை காரணமாகவும், பிரதேசங்களின் விரிவான அமைப்புக்காரணமாகவும், அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்தனர், இன்னமும் பெற்றுள்ளனர்.

பின்னர் இந்திய அரசமைப்புக்கு இந்திய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பெரியதோர் சவால். ஆனால் அரியதோர் வாய்ப்பு. சாசன உருவாகத்திற்கு தலைமை வகித்தவர் அம்பேத்கார். நீதித்துறை அறிஞர். குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நீதித்துறை சார்ந்தவர்கள். என்னுடைய எண்ணத்தில் குறைந்தது ஒரு உலக சரித்திர அறிஞரும், ஒரு சமூக இயல் வல்லுனரும் அவசியம் இருந்திருக்க வேண்டும். அவர்களது பங்களிப்பு, அரசியல் சாசன அமைப்புக்குப் பல வகைகளிலும் உதவியிருக்கும். இன்று நமது அரசியல் சாசனத்தில் இருக்கும் ஊழல்வாதி, மற்றும் குற்றவாளி அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும், பேராசை ஏமாற்று வியாபாரிகளும், எளிதாக குறுகிய சந்தில் வெளியேறி ஓடி விடும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் தலைவர்கள் பேச்சுக்கு வருவோம். லால் பஹாதுர் சாஸ்த்ரி 1965 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பிறகு, ரேடியோவில் உரையாற்றினார். வாரம் ஒரு நாள், அதாவது திங்கள் கிழமை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உன்ன வேண்டும். நாட்டின் உணவுப் பொருள் சேமிப்பு மிக அவசியம் என்று வலியுறித்தினார். அப்பொழுது எனக்கு வயது 11. எனது அண்ணன், அக்கா, அம்மா, அப்பா அனைவரும் கூடினோம். முடிவெடுத்தோம். விரதம் காத்தோம். பற்பல வருடங்களுக்கு. சாஸ்த்ரி இருந்த பொழுதும். அவர் இறந்த பின்னரும். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சாஸ்த்ரி இறந்த அன்று எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனது போல் நாங்கள் விக்கி விக்கி அழுதோம். இன்று அன்பர்களே எனக்கு ஒரு தலைவரைக் காட்டுங்கள். அவன் இறந்தால் நாம் துயரமடைவோம் என்று. முக்காவாசி கேசு எப்ப செத்துத் தொலையும்னு காத்துக்கொண்டிருக்கிறோம். ................தொடரும்

Saturday, May 26, 2012

இந்தியாவில் என்றாவது ஒரு நாள் .............



சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா தினத்தாளில் சித்தார்த் பாட்டியா என்பவர் ஓர் அருமையான கட்டுரை எழுதி இருந்தார். அதில் இந்தியாவில் மிக அதிகப் பணம் படைத்தவர்களும், அதிகாரத்திலிருப்பவர்களும், எவ்வாறு தேசத்தின் விதி வரம்புகளை மீறி செயல் படுகிறார்கள். அநியாயங்களையும், அநீதிச்செயல்களையும்  தம்போக்கில் செய்து கொண்டு, ஆணவத்தோடு தறி கேட்டு அலைகிறார்கள் என்பதை விவரித்திருந்தார். கட்டுரை முடிவில் ஒரு வினா எழுப்பி இருந்தார். பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டே வந்த பொருளாதாரத்தில் நடுத்தர, மற்றும் கீழ்த்தட்டு வகுப்பினர் ஒருநாள் வெகுண்டு எழுந்தால் என்னவாகுமென்று.

இதைத்தொடர்ந்து நான் இந்நாட்டிலும், அயல் நாட்டிலும் வாழும் நண்பர்களுடன் உரையாடும்போது, எங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்தியாவிலும் என்றாவது ஒரு நாள் ஃபிரெஞ்சுப் புரட்சி போல், இந்திய சுதந்திரப் போராட்டம் போல் ஏதாவது ஒன்று நிகழுமா என்று. பலரும், இன்றைய இளைஞன் அதிக சமுதாய அறிவு பெற்றிருக்கிறான், உலகத்தை அங்கு சென்று பார்க்கிறான். நிச்சயமாக நடந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். நான் அவர்கள் பலரின் எண்ணங்களிலிருந்தும் மாறு பட்டு தனித்து நிற்கிறேன்.

என் எண்ணங்களை சிறிதே இங்கு பிரதிபலிக்கிறேன். முதலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். மகாத்மா காந்தியை உலகம் முழுதும் பாராட்டுகிறது. மனித வள மேம்பாட்டு சிந்தனைகளில் Leadership பாடங்களில் அவரை முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர்.  ஆனால் அவர் பிறந்த மண்ணிலேயே, இன்று பலர் தனிப்பட்ட சுய நலக்காரணங்களுக்காக அவரை கடுமையாக நிந்திக்கின்றனர். அது ஒரு புறமிருக்கட்டும். மகாத்மா காந்தியுடன் இருந்த தலைவர்கள் யார் யார்? நம் நாட்டு சுதந்திரத்துக்காக உழைத்தவர்கள் யார்? சர்தார் வல்லப்பாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே. தாதாபாய் நவ்ரோஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர். இராஜேந்திர பிரசாத். பாரதியார், பிரகாசம் இப்படியான பெயர்கள் பல நூறு.

ஒரு மாற்றத்திற்கு இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் பெயர் சொல்லுங்கள், சரத் பவார் - மகாராஷ்டிர நாட்டின் ஊழல் உறைவிடம், ஒவ்வொரு விவசாயியின் மரணத்திலும் மனக்கணக்கில் கோடி சேர்க்கும் கோமான். கருணாநிதி - தகரப் பெட்டியுடன் (அவர் சொல்படியே) சென்னை வந்து பல தலைமுறைகளுக்கும் தொடருமளவு பொருளீட்டி, விரிந்து பரந்த உறவினர்களுக்கும் பொருளீட்டும் பாடங்களைத் தெளிவாகப் போதித்த புனித மகான். 'நெஞ்சுக்கு நீதி' தேடிக்கொண்டே இருக்கும் உத்தமன். எந்த கட்சியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு சமூக நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இளைய சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அறிய தலைவனை எனக்குக் காட்டுங்கள். காந்திக்கு ஒப்பாக, படேலுக்கு ஒப்பாக, கோகலேவுக்கு ஒப்பாக, நேதாஜி சுபாஷ் சந்திரா போசுக்கு ஒப்பாக.

அப்துல் கலாமில்லையா என்று நீங்கள் சொல்லலாம். அப்துல் கலாம் ஒரு உன்னதமான இந்தியர். சந்தேகமில்லை. எனினும் அவரால் புரட்சிக்களம் இறங்க முடியுமா......யோசித்துப் பாருங்கள். அன்னா ஹசாரேவுடன் இணைந்தோ, பாபா ராம்தேவுடன் இணைந்தோ செயல்படுவாரா............முடியாது...........அவர் போக்கு தானி. அவர் செயல்திறன் வேறு வகையானது. ...............தொடரும்