Tuesday, October 20, 2009

திருமாவளவன் என்று ஒரு தமிழ்த் தலைவர்

தமிழன் நான், தமிழன்பன் நான் இன்று காலை தினமலர் செய்தித்தாளைத் திறந்து இலங்கை சென்றிருக்கும் நம் தமிழ்த் தலைவர்களைப் பற்றிய செய்தி படித்ததும் மெய் சிலிர்த்தேன், புல்லரித்துப் போனேன், புளகாங்கிதம் அடைந்தேன். இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுது. இத்தோட நிறுத்திக்கிட்டா தமிழ் தலைவர்களுக்கும் நல்லது. எனக்கும் ரொம்ப நல்லது.


நியூச கேளுங்க. இலங்கைத் தமிழினக் கொல்லி ராஜ பக்சே திருமாவளவன் எனும் தமிழ்த்தலைவனை ஆரத்தழுவிக்கொண்டான். மேலும் சொன்னான்:
" நீங்கள் பிரபாகரனோடு தொடர்ந்து இருந்திருந்தால் நீங்களும் அழிந்திருப்பீர்கள். நல்ல வேளையாக தப்பித்துக்கொண்டீர்கள்"



இதைக்கேட்டதும் உடனிருந்த தமிழக எம்.பி. க்கள் அச்சமடைந்தனர், என்ன நடக்குமோ என்று. ஆனால் தமிழ்த்தலைவர், தன்மானச்சிங்கம், சிறுத்தை, புலி, (காட்டு மிருகங்கள் பேர வைக்கறதுதான் இப்ப ஃபேஷன்) சிறிதும் கலங்காது, எதுவும் பேசாமல் புன்முறுவல் பூத்தார். என்னவொரு காட்சி. இந்த செய்தியை படித்த பிறகும் புல்லரிப்புப் பத்தலைன்னா வகதா.டிவில நுழைஞ்சு தானைத் தலைவன் திருமாவளவன் பேச்சை வீடியோ வில கேட்டுப் பாருங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு மேல புல்லரிச்சுப்போயி சொறிஞ்சிக்கிட்டே இருப்பீங்க.


இதுக்கும் மேலாக எனக்கு என்னுடைய சிறு வயது நண்பன் ஞாபகம் வந்தது. அவன் எந்த ஊர் வம்புக்கும் போக மாட்டான். ரொம்ப பயந்த குணம். ஒரு நாளைக்கு ஒரு சின்ன சண்டை. எதிராளி அவன ஓங்கி அறைஞ்சிட்டான். உடனே வெகுண்டு எழுந்த என் நண்பன் "எனக்கு கோபம் வந்தா என்ன செய்வேன் தெரியுமா?" என்று கேட்கவும், நாங்கள்ளாம், பயத்தோட பாத்துக்கிட்டு இருந்தோம். ஏன்னா, என் ஃபிரெண்ட அறைஞ்சவன் ரொம்ப மொரடன். என் ஃபிரெண்டு ரொம்ப நிதானமா கன்னத்த தொடச்சிக்கிட்டு சொன்னான் "பொறுத்திக்கிட்டு போயிடுவேன்" னு. பல நாட்களுக்கு அந்த ஜோக்க நாங்க சொல்லி சிரிச்சிக்கிட்டே இருப்போம். இது இப்ப ஞாபகம் ஏன் வருதுன்னு சத்தியமா தெரியாதுங்க எனக்கு.


அரைவேக்காடு விளக்கம்

நமது இந்திய நாட்டின், உள்துறை அமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் விருதுநகரில் நாக்சலைட்டுகள் ஏன் நாக்சலைட்டுகள் ஆகிறார்கள் என்பதற்கு அருமையான ஒரு விளக்கம் கொடுத்தார். "உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காதவர்களே நாக்சல்களாக மாறுகின்றனர்". என்னவொரு விளக்கம். அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து.



பாகிஸ்தானிய நாச வேலைக்காரர்கள் மும்பையில் ஊடுருவி நாச வேலை செய்த பிறகு, சிதம்பரம் உள்துறை அமைச்சரானதில் மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சமீப காலங்களில் நடக்கும், உள்நாட்டு மாவோவிஸ்டுகளின் மற்றும் நாக்சலைட்டுகளின் அட்டகாசங்களைப் பார்க்கும்பொழுதும், மற்றும் அதற்கு பதிலாக சிதம்பரம் அவர்கள் பேசும் பேச்சை கேட்கும்பொழுது விரக்திதான் மிஞ்சுகிறது. நல்ல ஒரு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள், ஒரு திறமையற்ற உள்துறை அமைச்சராக மாற்றம் பெற்றுவிட்டாரோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த அச்சத்திற்கு ஊட்டம் அளிப்பது போல் இருக்கிறது விருது நகரில் அவர் தெரிவித்த கருத்து.



நாக்சல்பாரி இயக்கம் என்பது நாட்டின் சுதந்திரக் கோட்பாடுகளுக்கு பல முறைகளில் இன்னல் வகுக்கும் ஒரு மிகப்பெரிய அமைப்பு அது. அவர்களின் நாச வேலைகளை எதிர் கொள்வதற்கு அழ்ந்த அறிவும், நீண்ட சிந்தனையும், தொடரும் செயல் திட்டங்களும், மற்றும் உயர்ந்த கோட்பாடுகளும் தேவை. இது போன்ற ஒரு வரி அரைவேக்காடு விளக்கம், அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது. இது அவர்தம் இயலாமையை தெளிவாகத் தெரிவிக்கிறது.

Saturday, October 17, 2009

செத்து மடிந்தது தமிழ் இன உணர்வு

கடல் கடந்து சென்றான் தமிழன் கனவுகளுடன்
கால மாலை பார்க்காது உழைத்தான் வயிறு கழுவ
தாய் மண்ணை மறந்து, சென்ற இடம் தன்னிடமாக்கி
தான் தமிழன் என்று மறவாது, தமிழ் மட்டும் பேசி
அந்நிய மண்ணில் தமிழ் தழைக்க விரும்பினான்



மணம் முடித்து, குழந்தைகள் பல பெற்று வளங்கள்
மனம்போல் பெற்றான் பற்பல - பொறுக்காத சிங்களவன்
பாவங்கள் பல புரிந்தான், தமிழ் மாதர் தம் குலத்தை
பரிதவிக்க விட்டு காட்டாட்ச்சி நடத்தினான்.


ராஜபக்சே என்னும் கொடுங்கோலாளன் தருணம்
பார்த்து அரங்கேற்றினான் ஒரு நாடகத்தை
விடுதலைப் புலிகளை முடிக்கிறேன் என்ற பெயரில்
நடத்தி முடித்தான் தமிழ் குல வேரறுப்புச் செயல்


தமிழ்க் குலக் காவலெரன, நாள் தோறும் மேடை போட்டு தன்மானத் திரையில் நாடகம் போட்டு ஏமாற்றினார்கள் தமிழ் நாட்டுத் தமிழ் தலைவர்கள்.


குளிர்சாதனப் பெட்டிகளும், ஒன்றுக்கும் மேலான துணைவியாரும் சுற்றிருக்க சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்குமிடையே உண்ணா நோன்பு இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் வியாபாரம் செய்தார்கள்


கூடிய விரைவில் எதிர் பாருங்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவுக்குத் தமிழ் நாட்டில் அண்ணா விருது, பெரியார் விருது போல், கலைஞர் விருது கொடுத்து விழா எடுப்பார்கள். தமிழனுக்கு எதையும், எந்த கண்றாவியையும் தாங்கும் இதயம் உண்டு.

Wednesday, October 14, 2009

சாயம் வெளுத்தது


இலங்கை - இலங்கையில் தலைமாநகரத்தில் ஒரு கண் கொள்ளாக் காட்சி. தமிழனத்தலைவர்கள், இலங்கை சென்றதற்கான காரணம் ஒரு புகைப்படைத்த பார்த்த மாத்திரத்தில் தெளிவாகப் புரிந்தது.


தமிழ்க் காவலர், தமிழினக்காவலர், நெஞ்சுக்கு எக்காலமும் நீதி தேடிக்கொண்டே இருப்பவரின், நேரடி மேற்பார்வையில், இலங்கை சென்ற தமிழினத் தலைவர்கள், கொடுங்கோலன் ராஜபக்சேவை நேரில் பார்த்து நீதி கேட்டார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமான தமிழின உயிர்களை கொன்று குவித்ததுக்குப் பாராட்டாக, ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். ஆரத்தழுவி இன்புற்றார்கள்.


தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். யாருக்கு என்ன வந்தது? உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக பரவி இருக்கும் தமிழினம் செத்தொழியட்டும். தமிழ் நாட்டுத் தமிழனுக்கு என்ன அக்கறை? கலைஞர் ஆட்சியில் கிடைத்த இலவச தொலைக் காட்சிப் பெட்டி பெற்று, சூரத் நமிதாவையும், மற்றும் பல்வேறு மாநில வெள்ளைத்தொல்களையும், கண்டு கைதட்டி மகிழட்டும். எந்தத்தமிழன் எங்கு செத்தால் இவர்களுக்கென்ன. இலவசப் பொருள் சமுதாயம் பெருகி வளரும்போது, மொழி உணர்வு, இன உணர்வு, மனித நேயம் என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. தன்மானம் என்பது பேசுவதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே.




விருந்து முடிந்த பின் விழுந்த இலைகளை
நக்கிடும் நாய்க்கும் நாளொன்று கழியும்,
நாளைக்க கழிப்பதே நானிலப் பிறப்பெனில்........................





தலைவர் நெஞ்சுக்கு நீதி தேடி விட்டார். கழகங்களின் சாயம் மற்றுமொருமுறை முழுமையாக வெளுத்து விட்டது.







SPECIAL REQUEST

A SPECIAL REQUEST TO MY REGULAR READERS FROM DELHI AND ALL OTHERS:



WHY NOT PUT YOUR COMMENTS ON THE BOARD? THEY CAN HELP ME WRITE BETTER, MORE APTLY, AND MORE APPROPRIATELY.


MY ENDEAVOR IS TO BRING LIKE MINDED PEOPLE TOGETHER TO CREATE A PATRIOTIC INDIA! A COUNTRY WHERE OUR FUTURE GENERATIONS WILL LIVE IN PEACE, PROSPERITY AND WITH PRIDE.

சவாலுக்கு சவால்

பதின்மூன்றாம் தேதி தினமலர் படியுங்கள். மாவோவிஸ்டுகள் மூன்று மாநிலங்களில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நேர் சவால் விட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து சாலைகளிலும், ரெயில் வழித் தடங்களிலும், கட்டிடங்களிலும், குண்டு வைத்து நாச வேலைகள் பல செய்துள்ளனர்.


அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சை கூர்ந்து கவனித்தால் ஒன்று நிச்சயம் புலப்படுகிறது. அவரது பேச்சு நம்பிக்கை மிக்கதாகத் தெரியவில்லை. அவருக்கு இந்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சரியான வழிகள் புலப்படுவதாகத் தோன்றவில்லை. நிலைமை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இன்னும் மோசமடைந்துவிடும் போல் அச்சம் தோன்றுகிறது. மூன்று மாநிலங்களில் மவோவிஸ்டுகள் விட்ட சவால், செய்த செயல்கள் என் அச்சத்தை உறுதி செய்கின்றன.


அது போகட்டும். இன்றைய இந்நிலைக்கு யார் பொறுப்பு? நாம்தான். நாம் தான் என்றால், நான், நீங்கள் ஒவ்வொரு இந்தியனும். இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தோம். விடுதலைக்குப்பின்னர், ஊழல் அதிகாரிகளிடமும், ஊழல் அரசியல்வாதிகளிடமும், ஏமாற்று வணிகர் களிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இது போதாது என்று, பேராசைக்கு அடிமைப்பட்டு வெட்கம் விட்டு, தன்மானம் துறந்து, ஊழல்வாதிகளின் அடி வருடிகிறோம். சுருக்கமாகச்சொன்னால், நாட்டுப் பற்று இழைந்து, கோழைகளாகி, நாம் அனைவரும் மிக மேதுவாகக் கொல்லும் தற்கொல்லி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.


இதன் பரிணாம வெளிப்பாடுதான் மாவோவி்ஸ்டிகளும், நாக்சலைட்டுகளும், மற்றும் பல தேசிய விரோத அமைப்புகளும். பெரும்பான்மை மக்கள், பொறுமை என்ற பெயரில், மனோபலமின்றி, அநியாயங்களையும், மக்கள் விரோத செயல்களையும், சகித்துப் போவதையும், முடிந்தால் கூட்டு சேர்ந்து தன் சுய லாபம் பார்ப்பதையும், காணச் சகிக்காமல் வெகுண்டு எழும் ஒரு சிலர் இது போன்று இயக்கங்களில் இணைந்து தங்கள் உணர்வுகளை முன்னிறுத்துகிறார்கள்.


அவர்கள் எண்ணத்தால் தேச விரோதிகள் அல்ல. நமது அரசியல் அமைப்பும், அரசு அலுவல்களும், நீதித்துறை செயல்பாடுகளும், பெரும்பான்மை மக்களின் போலித்தனமும், அவர்களை இந்நிலையில் தள்ளியுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து ஒவ்வொரு இந்தியனும், தன் சுய லாபங்களுக்கு மேலாக, நாட்டை முன்னிறுத்தி நாட்டுப் பற்றை வளர்ப்பதுதான். நாட்டுப்பற்று மிகுந்த ஒரு சமுதாயம் உருவானால், பற்பல பெருமைகளும், லாபங்களும், ஒவ்வொரு இந்தியனையும் தானே வந்தடையும்.


படைப்போம் ஒரு புதிய சமுதாயம். ஜெய் ஹிந்த்!

பார்க்க வேண்டியதைப் பார்ப்பார்கள், கேட்க வேண்டியதை கேட்ப்பார்கள்

அண்ணே! அண்ணே! இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு காலம் பொறந்திடுச்சு அண்ணே!



எத்த வச்சு இப்படி சொல்ற நீ?



ஆமாண்ணே, தமிழகத்துக்காகவும், தமிழனுக்காகவுமே தங்களையெல்லாம் முழுமையா அர்ப்பணிச்சிக்கிட்ட தலைவருங்க எல்லாம், இலங்கை போயிருக்காங்க இல்ல.


சமயத்துல நீ ரொம்ப தமாசா பேசுறடா!


நான் சொன்னதில என்னண்ணே தப்பு?


நீ சொன்னது ஒண்ணும் தப்புன்னு சொல்ல முடியாது. இலங்கைல ஒரு இலக்கோட, விடுதலைப்புலிகள ஒழிச்சுக்க் கட்டறோம் என்கிற போர்வையில தமிழனத்த வேரோடு அறுக்க ராஜபக்சேயும் அவரோட ராணுவமும் முன்னாடி நின்னு செயல் பட்டப்போ நம்ம அரசியல் தலைவர்கள் எல்லாம் என்ன செய்திக்கிட்டு இருந்தாங்க?


என்னண்ணே செய்துகிட்டிருந்தாங்க?


பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள வேண்டா வெறுப்பா பல மணி நேரம், மனித சங்கிப் போராட்டம் என்ற பெயரில், வேகாத வெயிலிலும், மழையிலும் நிறுத்தி, ஏ. சி. வாகனங்களில் பவனி வந்து ஊக்கப்படுத்திக்கிட்டிருந்தாங்க. காலையில நாஸ்தாக்கும், மத்தியானம் சாப்பாட்டுக்கும் நடுவில கட்டில் மெத்தையில் படுத்து, ஏர் கண்டிஷனர்களுக்கு நடுவே உண்ணா விரதம் இருந்தாங்க. இதுக்கு நடுவுல எலெக்ஷன் வரவும், மாமனுக்கும் மச்சானுக்கும் சீட்டு புடிக்கரதுலையும், சீட்டு புடிச்சதும், வோட்டை வாங்கரதுலையும், அதாவது ஓட்டு வாங்கரதுலையும் பிசியா இருந்தாங்க. ஏன்னா, இலங்கைத் தமிழன் எங்க போறான், அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்க.



அது போகட்டும்ணே! இப்பாவாவது முயற்சி எடுக்கறாங்க இல்ல? அத்தப் பாராட்டாம பழசையே பெசறீங்கலேண்ணே!



பாராட்டலாம்டா! எண்ணமும், பேச்சும், செயலும் ஒண்ணா இருக்கறது மட்டுமில்லாம எப்பவுமே ஒண்ணா இருந்தா பாராட்டலாம்டா! நம்ம இந்திய, தமிழ் அரசியல்வாதிங்ககிட்ட இந்த நம்பிக்க எனக்கு இல்ல அத்தோட வுடு!



நல்லதே நடக்காதுங்கரீங்களா?



அப்படி எப்படி சொல்ல முடியும். நல்லது யாருக்குன்னு கேளு சொல்றேன்!



யாருக்குன்னு என்னண்ணே கேள்வி? இலங்கைத் தமிழர்களுக்கு தான்.



ராஜபக்சே என்ன கேனன்ன்னு நெனைச்சியா? காட்ட வேண்டியதக் காட்டுவான். அதுகள மட்டுமே காட்டுவான். ஒரிஜினல் பிளானுக்கும், ஆக்ச்சுவலுக்கும் வித்தியாசம் போனதுமே ஆரம்பிச்சிடுச்சு. பேச வேண்டியத மட்டுமே பேசுவான், பேச விடுவான். குடுக்கறத வாங்கிக்கிட்டு திரும்ப வருவாங்க. அதாவது அவுங்க குடுக்கற நியூச வாங்கிக்கிட்டு வருவாங்கன்னு சொன்னேன்.