Sunday, May 3, 2009

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் - இனி
கட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க
நமது வோட்டுரிமை.

Saturday, May 2, 2009

அன்று பகுத்தறிவு வியாபாரிகள் 2

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது. கம்ப்யூட்டர் வரவும் , செல் ஃபோன் வரவும், சாதாரண இந்தியனின், குறிப்பாக தமிழனின் வாழ்வை நன்முறையில் வெகுவாக பாதித்தது. கிராமத்த்தில் விவசாயம் செய்து, வருமானம் குன்றி, வறுமையில் வாடிய விவசாயியின் மகன் பொறியியல் படித்தான். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் வல்லுனனான். அமெரிக்காவும், இங்கிலாந்தும் பறந்து சென்றான். பகுத்தறிவு பிரச்சாரம் வியாபாரம் ஆகவில்லை. பல லட்சம் குவித்த தமிழன் கூடவே குறைவில்லாமல் கவலைகளையும் குவித்தான். கோவில்கள் பெருகின. சாதிக்கொரு அரசியல் கட்சி போலவே, சாதிக்கொரு சாமியாரும் உருவெடுத்தார். கோவில்களும் சாதிச் சாயம் பூசிக்கொண்டன.
பகுத்தறிவு பாது காவலரகள், நாத்திக சாமியார்கள் எலெக்ட்ரானிக் மீடியம் துணையுடன் இக்காலத்தில் நன்கு விற்கக்கூடிய, பக்தியை விற்க ஆரம்பித்து விட்டார்கள். மூட நம்பிக்கைகளை முன்னே வைத்து, உலக தமிழர்களை அணுக ஆரம்பித்து விட்டார்கள். தொலைக்காட்சிகளில் இவர்கள் தொல்லை தாங்க வில்லை.
ஒரு கழகக்கண்மணி அலை வரிசையில், ஒரு சீரியலில், நாயகி முக்கியமான வேளையாக வெளியே போகும்போது பூனை அவள் பாதையில் குறுக்கிட்டு காரியத்தைக் கெடுக்கிறது. கழகக்கண்மணிகளின் மிகப்பெரும் மூத்த தலைவன், பகுத்தறிவின் நாயகன், நெஞ்சுக்கு நீதியை தேடிக்கொண்டே இருப்பவர், அவர்தம் அலை வரிசையில் நாயகி மனத்துயரம் கொண்டு மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து மணியடிக்க, பூ விழுகிறது. அதுவும் சிகப்பு, செம்பருத்திப்பூ. அம்மன் ஒரு வயதான பெண்மணி உருவில் வந்து நல்ல சொல் சொல்கிறாள். நாயகி புல்லரித்துப் போகிறாள்.
என்ன ஒரு வளர்ச்சி! பகுத்தறிவு வியாபாரத்தில் துவங்கி இன்று பக்தி, பக்தி என்று கடவுள் நம்பிக்கை கொண்ட நான் சொல்ல மாட்டேன், மூட நம்பிக்கை வியாபாரம் நன்கு வளர்ந்து விட்டது. பகுத்தறிவிலும் பணம். பக்தி என்ற பெயரில் பகுத்தறிவு குன்றிய நம்பிக்கைகளிலும் பணம்.
வாழ்க தமிழன். வளர்க அவனது பகுத்தறிவு!

அன்று பகுத்தறிவு வியாபாரிகள்

நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னர் இவர்கள் கடை விரித்தார்கள். கழகம் என்பது அதன் பேர். பகுத்தறிவு பிரச்சாரம் துவங்கினார்கள். ஒப்புக்கொள்ள வேண்டும். வியாபார தந்திரத்தில் திறமை அவர்களது. மெச்ச வேண்டும். இப்பகுத்தறிவு பிரச்சாரத்தில் மிகவும் கை கொடுத்தது மொழி வெறியும், பார்ப்பன விரோதமும். பிரச்சாரத்திற்குக் கிடைத்தார்கள் திறமையான பேச்சாளர்கள். அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேசினார்கள். சாதாரணத் தமிழன், புளகாங்கிதம் அடைந்தான். கைகள் தட்டி ஆரவாரித்தான். வியாபாரம் சூடு பிடித்து விட்டது.

நேற்று வரை, பார்ப்பன நண்பனுடன் தோள் மீது கை போட்டு நடந்தவன் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றான். பூணூல் அறுத்தான். பெருமை அடைந்தான். ஆங்கில எழுத்துக்கும், இந்தி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தான். தலைவர்கள் "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூக்குரல் கொடுத்தார்கள். கரி கொண்டு சுவற்றில் எழுதுவதிலும், தார் கொண்டு எழுத்துக்களை அழிப்பதிலும், பார்ப்பனனின் பூணூலை அறுப்பதிலும் தான் பகுத்தறிவின் பொருள் அடங்கி இருப்பாதாக எண்ணி இறுமாப்படைந்தான்.

பேச்சுசுத்திறமை உள்ளவர்கள் புகழ் பெற்றார்கள். புகழ் பெற்றவர்கள் பதவியும், பணமும், பேரளவு பெற்றார்கள். அண்ணன், தம்பிகளும், மச்சினன், மச்சினிச்சியும் கூடவே வளர்ந்தார்கள். விரிவான குடும்ப நபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களானார்கள். தலைவர்கலுக்கு கூஜா தூக்கி, சேவகம் செய்த தொண்டர்கள், மனைவி, மக்கள் மறந்து, குடும்ப பொறுப்புகள் துறந்து, வீணாய்ப் போனார்கள். தலைவன் வாழ்க என்று கூறி தன் சொந்த குடும்புகளை வீழ்த்தினார்கள். பகுத்தறிவு மலர ஆரம்பித்தது. . . .................................. தொடரும்.

Saturday, April 25, 2009

தமிழன் - எங்கே அவன்?


மனித சங்கிலி, தொடர் உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு - நாடகங்கள் தொடர்கின்றன. இலங்கைத்தமிழனுக்காக நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்கள் என்று தவறாக அழைக்கப் படுபவர்கள் முதலைக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதலைகள் கண்ணீர் விடுவதெல்லாம் இறைச்சிக்காகத்தான். நம் இந்திய, தமிழ் நாடு உட்பட, அரசியல் வாதிகளுக்கு உணவு, பணம், பொருள், பதவி, பெருமை எல்லாமே, சராசரி இந்தியனின் பசியிலும், பட்டினியுலும், துயரத்திலும் தான்.

பசியில் வருந்துவான் தமிழன், பார்த்துப்பார்த்து பேராசை வளர்ப்பான் அரசியல்வாதி,

நோய்வாய்ப்படுவான் தமிழன், நோட்டுக்களை எண்ணுவான் அரசியல்வாதி.

வாடுபவன் தமிழன், வளர்பவன் அரசியல்வாதி.

அரசியல்வாதிகள் முதலைகள், தலை கொடுக்கத் தயார் சராசரி தமிழன்.

விழித்தெழு தமிழா! வீணே தலைவன் புகழ் பாடாதே!

Friday, April 17, 2009

தேர்தல் திருவிழா - ஓடி வா!

ஓடி வா! ஓடி வா! தேர்தல் வருது - ஓடி வா! ஓடி வா!
கை கூப்பி கும்பிடு போடுவார் அவர்
பணிவுடன் வோட்டு கேட்டு வருவார்
சிரிப்பின் எல்லைகள், இரு காதுகளையும் தொடும்
குறைகள் அவர் கேட்டு, வாக்குறுதிகள் பல தருவார்
பதவி பெற்றதும் பாருங்கள் பலன் பல உங்கள் கையில் என்பார்
கையில் மை வைத்து அள்ளிக்குவிப்பார் ஓட்டுகள்
முகத்தில் கரி பூசி, நாட்டைக் கொள்ளையடித்து
வாழ்க இந்தியா! வளர்க ஜனநாயகம்! என்று உரக்க கூவுவார்
ஓடி வா! ஓடி வா! தேர்தல் வருது - ஓடி வா! ஓடி வா!

இனம் கண்டுகொள் இந்தியனே! உன் கடமையைச் சரியாகச்செய். ஒட்டுப்போடு உண்மையானவர்களுக்கு!

Thursday, April 16, 2009

தேர்தல் திருவிழா

இதோ துவங்கிவிட்டது தேர்தல் திருவிழா. திருவிழா என்றாலே பொதுவானது கூட்டம், இரைச்சல், கோலாகலம். மற்றுமொன்று திருவிழா என்றாலே கொண்டாட்டம் பலவிதமான கள்வர்களுக்கும். பிக் பாக்கெட்டுகளுக்கு கொள்ளை லாபம். இரவு பகலாக வீடுகள் பூட்டி இருக்கும்பொழுது, வீடு புகுந்து திருடுபவர்களுக்கும் பலத்த வருமானம்.


தேர்தல் திருவிழா. மற்ற திருவிழாக்களில் இருந்து மாறுபட்டதல்ல. ஒன்றே ஒன்று. இத்திருவிழாவில் குழந்தைகளுக்கு பங்கேற்பு இல்லை. கூட்டம் கூடும். கூட்டம் கூட்டப்படும். இரைச்சலுக்குக் குறைவே இல்லை.

பணம் தண்ணியாக வோடும். பொது மக்களுக்கு பரிசுப்பொருள்கள் அள்ளி வீசப்படும். பதிலுக்கு அவர்கள் கேட்பதெல்லாம் ஒருவருக்கு ஒரு வோட்டு மட்டுமே. இந்திய குடிமகனும் முட்டாளல்ல. பல பேரிடம் பணம் பெற்று, பரிசு பெற்று, ஒருவனுக்கு வோட்டுப் போடுவான். தன் சாமர்த்தியத்தைத் தானே மெச்சுவான்.

பரிசு கொடுத்தவன், பதவிகள் பெற்று, நம் வீடுகளை அல்ல, நம் நாட்டையே சுரண்டி அன்னியனிடம் அடமானம் வைப்பான். கிடைத்த கமிஷனை சுவிஸ் வங்கிகளில் முடக்குவான்.

பிளாட்பாரத்தில் ஒண்டியவன், பெரும் முதளாளியாவான். பகட்டான வீடுகளில் வாழ்க்கை நடத்துவான். கப்பல் போன்ற கார்களில் பவனி வருவான். சில நூறு ரூபாய்க்களுக்காக நாட்டை இழந்தவன், தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டு, ஒரு குவளை கஞ்சிக்கு கை ஏந்துவான். இவன் பெயர் இந்தியன். நம் நாடு இந்தியா.

வாழ்க இந்திய! வளர்க இந்தியன்!

Wednesday, March 11, 2009

தடி எடுத்தவன் தண்டல்காரன்

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பார்கள். உண்மை. உண்மை. ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கை தெளிவாக்கிவிட்டது. சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்த கலவரங்களுக்கு யார் காரணம் என்று. குற்றம் சாட்டப்பட்டவுடனே வெகுண்டு எழுந்தார்கள் நம் பண்பு மிகு வழக்கறிஞர்கள். வழக்கு ஆரம்பிக்கும் முன்னரே அவர்கள் தான் குற்றவாளிகள் என்று கை காட்டி, கூட்டம் போட்டு, கோஷம் போட்டு, குற்றத்தின் காரணத்தை திசை மாற்ற, குற்றத்தின் விதைகளை விதைத்தவர்களே வேஷம் போட்டு நாடகம் ஆடினார்கள். திரை விலகி விட்டது. முகத்திரை கிழிந்து விட்டது. இருந்தும் நாடகம் ஆடுகிறார்கள். சுதந்திர இந்தியா. ஆடுங்கள் ஆட்டம். அடங்கி விடும் ஒரு நாள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது இயற்கையின் நியதி.