Saturday, April 25, 2009

தமிழன் - எங்கே அவன்?


மனித சங்கிலி, தொடர் உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு - நாடகங்கள் தொடர்கின்றன. இலங்கைத்தமிழனுக்காக நம் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், தலைவர்கள் என்று தவறாக அழைக்கப் படுபவர்கள் முதலைக் கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதலைகள் கண்ணீர் விடுவதெல்லாம் இறைச்சிக்காகத்தான். நம் இந்திய, தமிழ் நாடு உட்பட, அரசியல் வாதிகளுக்கு உணவு, பணம், பொருள், பதவி, பெருமை எல்லாமே, சராசரி இந்தியனின் பசியிலும், பட்டினியுலும், துயரத்திலும் தான்.

பசியில் வருந்துவான் தமிழன், பார்த்துப்பார்த்து பேராசை வளர்ப்பான் அரசியல்வாதி,

நோய்வாய்ப்படுவான் தமிழன், நோட்டுக்களை எண்ணுவான் அரசியல்வாதி.

வாடுபவன் தமிழன், வளர்பவன் அரசியல்வாதி.

அரசியல்வாதிகள் முதலைகள், தலை கொடுக்கத் தயார் சராசரி தமிழன்.

விழித்தெழு தமிழா! வீணே தலைவன் புகழ் பாடாதே!

Friday, April 17, 2009

தேர்தல் திருவிழா - ஓடி வா!

ஓடி வா! ஓடி வா! தேர்தல் வருது - ஓடி வா! ஓடி வா!
கை கூப்பி கும்பிடு போடுவார் அவர்
பணிவுடன் வோட்டு கேட்டு வருவார்
சிரிப்பின் எல்லைகள், இரு காதுகளையும் தொடும்
குறைகள் அவர் கேட்டு, வாக்குறுதிகள் பல தருவார்
பதவி பெற்றதும் பாருங்கள் பலன் பல உங்கள் கையில் என்பார்
கையில் மை வைத்து அள்ளிக்குவிப்பார் ஓட்டுகள்
முகத்தில் கரி பூசி, நாட்டைக் கொள்ளையடித்து
வாழ்க இந்தியா! வளர்க ஜனநாயகம்! என்று உரக்க கூவுவார்
ஓடி வா! ஓடி வா! தேர்தல் வருது - ஓடி வா! ஓடி வா!

இனம் கண்டுகொள் இந்தியனே! உன் கடமையைச் சரியாகச்செய். ஒட்டுப்போடு உண்மையானவர்களுக்கு!

Thursday, April 16, 2009

தேர்தல் திருவிழா

இதோ துவங்கிவிட்டது தேர்தல் திருவிழா. திருவிழா என்றாலே பொதுவானது கூட்டம், இரைச்சல், கோலாகலம். மற்றுமொன்று திருவிழா என்றாலே கொண்டாட்டம் பலவிதமான கள்வர்களுக்கும். பிக் பாக்கெட்டுகளுக்கு கொள்ளை லாபம். இரவு பகலாக வீடுகள் பூட்டி இருக்கும்பொழுது, வீடு புகுந்து திருடுபவர்களுக்கும் பலத்த வருமானம்.


தேர்தல் திருவிழா. மற்ற திருவிழாக்களில் இருந்து மாறுபட்டதல்ல. ஒன்றே ஒன்று. இத்திருவிழாவில் குழந்தைகளுக்கு பங்கேற்பு இல்லை. கூட்டம் கூடும். கூட்டம் கூட்டப்படும். இரைச்சலுக்குக் குறைவே இல்லை.

பணம் தண்ணியாக வோடும். பொது மக்களுக்கு பரிசுப்பொருள்கள் அள்ளி வீசப்படும். பதிலுக்கு அவர்கள் கேட்பதெல்லாம் ஒருவருக்கு ஒரு வோட்டு மட்டுமே. இந்திய குடிமகனும் முட்டாளல்ல. பல பேரிடம் பணம் பெற்று, பரிசு பெற்று, ஒருவனுக்கு வோட்டுப் போடுவான். தன் சாமர்த்தியத்தைத் தானே மெச்சுவான்.

பரிசு கொடுத்தவன், பதவிகள் பெற்று, நம் வீடுகளை அல்ல, நம் நாட்டையே சுரண்டி அன்னியனிடம் அடமானம் வைப்பான். கிடைத்த கமிஷனை சுவிஸ் வங்கிகளில் முடக்குவான்.

பிளாட்பாரத்தில் ஒண்டியவன், பெரும் முதளாளியாவான். பகட்டான வீடுகளில் வாழ்க்கை நடத்துவான். கப்பல் போன்ற கார்களில் பவனி வருவான். சில நூறு ரூபாய்க்களுக்காக நாட்டை இழந்தவன், தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டு, ஒரு குவளை கஞ்சிக்கு கை ஏந்துவான். இவன் பெயர் இந்தியன். நம் நாடு இந்தியா.

வாழ்க இந்திய! வளர்க இந்தியன்!