Sunday, May 30, 2010

முதலில் ஒழிப்போம் ஊழல்வாதிகளை!

மாவோவி்ஸ்டுகள் மற்றும் வேறு பல அமைப்புகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிர் அழிந்து கொண்டிருக்கிறது. உடல்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். அரசும், அரசியல் தலைவர்களும் பசப்பித்திரிகிறார்கள். நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி வெட்கம் கெட்டு வாய் கூசாமல் வசனம் பேசித் திரிகிறார்கள்.

இன்று கலைஞர் சொன்னார்: மனித நேயமற்ற செயல் என்று. ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் இவர் கட்சியினர் செய்த மனித நேயமற்ற செயல்களை அவர் மறந்திருக்கலாம். இத்தள்ளாத வயதில் இது இயற்கை தான். பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து சாதாரண மக்களை கொன்ற செயல் பெரும் மனித நேய செயலோ? இக்கொடிய கொலை வெறிச்செயலில் இவர் தம் அன்பு மகனின், மத்திய அமைச்சரின் பங்கு என்ன என்று சொல்வாரா?

மேலும் சொன்னார் பொதுவுடைமை கொள்கையில் கலைஞருக்கு முழு உடன்பாடாம். உண்மைதான். பொது என்பது இவர்தம் இரண்டு மனைவிகளையும், மூன்று மனைவிகளின் மக்களையும் சார்ந்ததாக இருந்தால் பொதுவுடைமை, முழுவுடைமை தான்.

இன்றைய கேள்வி: இவ்வியக்கங்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பலாமா வேண்டாமா என்பதுதான். என்னுடைய எண்ணம், நம் ஊழல் அரசியல் தலைவர்களும், ஊழல் அரசு அதிகாரிகளும், ஊழல் வர்த்தகர்களும் தான் இது போன்ற சமுதாய அமைப்புகள் உருவாகுவதற்கு முக்கிய காரணம். எனவே தீர்வு இதுதான்: இவ்வூழல் வாதிகள் தங்களுடைய அனைத்து மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்களுடன், ஜார்கண்ட், சத்திஸ்கத், மற்றும் ஒரிசா காடுகளில் இறக்கிவிடப்பட வேண்டும்.

Sunday, May 23, 2010

பேச்சு, வெறும் வெட்டிப் பேச்சு!

மாவோவிஸ்டுகளின் கொலை வெறித் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தவறாமல் அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறார். முன்னேற்றம் ஏதும் இல்லை. கொலை வெறித் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மேலும் அதிகரித்துக் கொண்டிருக் கின்றன.


நமது இந்திய சமுதாயத்திற்கு பெரும் இன்னல் விளைவிக்கும் சமுதாய எதிர்ப்பு அமைப்புகளை நேர் நோக்கும் திண்ணமும், பக்குவமும், இதற்கும் மேலாக நேர்மைத் திறனும், இன்றைய அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் சிறிதளவும் கிடையாது. மேலும் சொல்ல வேண்டுமானால் மாவோவிஸ்ட் போன்ற அமைப்புகள் உருவாகுவதற்கே இவர்கள் தான் காரணம். ஊழல் அரசியல் தலைவர்கள், அவர்களோடு இணைந்து நாட்டை சூறையாடும் அரசு அதிகாரிகள், மற்றும் ஊழல் வர்த்தகர்கள். நம் நாட்டிற்கு இவர்கள் இழைத்த அநீதி, கொடுமை, மாவோவிஸ்டுகள் இன்னும் நூறு வருடங்களில் கூட இழைத்து விட முடியாது. மாவோவிஸ்டுகளுக்கு முன்னரே வேரறுத்துக் களையப்பட வேண்டியவர்கள் ஊழல் அரசியல் வாதிகள், ஊழல் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் வர்த்தகர்கள். இவர்களை வேரறுக்க ஒரு புதிய இயக்கம் நம் நாட்டில் தேவை. கூடிய சீக்கிரம் உருவாகும் என்ற நம்பிக்கை சில பல நாட்களாக வளர்ந்து வருகிறது.

ராஜினாமா தமாசு!

மங்களூரில் நூற்றி ஐம்பதுக்கும் மேலோர் விமான விபத்தில் மரணம். துயரமான செய்தி. அதைத் தொடர்ந்து ஒரு தமாசு செய்தி. அமைச்சர் ப்ரஃபுல் படேல் ராஜினாமா. அதை ஏற்க மறுத்தார் பிரதமர். பிரதமர் புத்திசாலி. திறமை அடிப்படையில் உற்று நோக்கினால் இன்றைய மந்திரி சபையில் பலர் பதவியில் இருக்க தகுதி அற்றவர்கள். ஒவ்வொருவரிடமும் ராஜினாமாவை ஏற்றால், மிச்சம் அவரிடம் இரண்டு மூன்று பேர்களே தங்குவார்கள். சிங் இஸ் தி கிங்!

Friday, May 21, 2010

காலாவதிப் பண்டங்கள்

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தினம் தோறும் நாம் செய்தித் தாள்களில் காலாவதி மருந்துகள் மற்றும் காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் படிக்கிறோம். நன்று.

காலாவதியான அரசியல் வாதிகளைப்பற்றி என் எண்ணம் போய்க்கொண்டிருக்கிறது. பல காலாவதி அரசியல்வாதிகள் இன்னமும் தமிழ் நாட்டு அரசியலிலும், மற்ற மாவட்ட அரசியலிலும், மத்திய அரசியலிலும் குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொண்டு மக்கள் இவர்களை அரசியல் களத்திலிருந்து நீக்கினால் நாட்டிற்கு நல்லது, இளைய சமுதாயத்தினற்கு நல்லது.

Saturday, May 8, 2010

ஊழலின் விளைவிடம்

ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை குருதியிலும், எலும்புகளிலும், சதைப்பிண்டங்களிலும் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள், தமிழனை பல வித போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கியது. நிழற் படங்கள், தொலைக்காட்சி, மது மற்றும், இலவசப் பொருட்கள். இன்றைய சாதாரண தமிழன் இவற்றுக்கு போதையாகி அல்லல் படுவது அன்றாட செய்தி. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

இன்று அறுவடை காலம். தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்கிறார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

எதிர்காலத்தில் நிலத்துக்கு சொந்தக்காரர் யார் என்ற கேள்விக்கு விடை தருவது மிகவும் கடினமான செயல். மூன்று மனைவிகள், ஆறு மக்கள் செல்வங்கள் என்னும்பொழுது சிக்கல் தான். விதித்த வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. அறுவடை செய்தே தீர வேண்டும். கண்ணதாசன் அன்றே சொன்னார்:
விதிஎன்று ஒன்றினை வெல்வதும் உண்டு காண்,
வெல்வதும் உன் விதியென வேதன் விதித்ததால்.