மேஜர் சந்தீப் உன்னி பெரும் போராளி. தன்னுடன் பணியாற்றுபவரின் உயிர் காத்தான். தன்னுயிர் நீத்தான். பத்திரிக்கை உலகமும், வானொலிப் பெட்டிகளும், தொலைக்காட்சி பெட்டிகளும் இரங்கல் தெரிவித்தன. என் எழுத்தக்களில் தவறில்லை. மறுபடியும் சொல்கிறேன். பத்திரிக்கை உலகமும், வானொலிப் பெட்டிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் இரங்கல் தெரிவித்தன. நாமெல்லாம், இவற்றை ப்படித்து, கேட்டு, கண்டு, மறு நாள் விடியும் முன்னர் மறந்து விடுவோம். ஆம். நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள். நம் உயிர் காப்பவர்களை நினைக்க நமக்கு நேரமில்லை.
நமக்கு நினைக்க, பேச, பார்க்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. செயற்கையான விஷயங்கள். சனி, ஞாயிறு தினங்களில் கோலங்களும், செல்விகளும், ஆனந்தமும் கிடையாது. அவையெல்லாம் இன்று திங்கள் கிழமை துவங்கிவிடும். திரையில் காணும் பிம்பங்களுக்காக மட்டுமே நாம் கண்ணீர் சிந்துவோம். செல்வி படும் பாடும், அபி மேற்கொள்ளும் துன்பங்களும், நம் எண்ணங்களை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கும் பொழுது, சந்தீப் எங்கு நினைவில் வருவார்.
இது போகட்டும். நம் கண் முன்னரே, நம்முடைய பகுத்தறிவுக்கு மிகவும் எளிதாக புரியும் பல விஷயங்கள் நம் முன்னே நடக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னரே தெருவில் திரைப்படச்சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தவன், இன்று தன்னை தலைவர் என்கிறான். அவன் பின்னே கூட்டம் போகிறது. அவனைப் பாதுகாக்க போலிஸ் போகிறது. நகர் நடுவில் அரண்மனை போன்று வீடு கட்டுகிறான். மிகப்பெரும் பணக்காரனாக உலவுகிறான். இது ஒரு உதாரணமே. இது போன்று பற்பல. இன்று இந்தியா முழுவதும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் பலரின் முற்காலம் என்ன.
பள்ளிப் படிப்பும் படிக்காதவர்களாய், தெருப் பொறுக்கிகளாய், தேச விரோதிகளாய் திரிந்தவர்கள், இன்று தலைவர்களாய், நம்மை ஆள்பவர்களாய் உலா வருகிறார்கள். நாம் சாதாரண குடிமகனாய், பொறுமை என்ற போர்வையில் வாழும் கோழைகளாய், சுற்றி நடக்கும் அநியாயங்களைப் பொறுத்துப்போகிறோம். நம் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அத்து மீறலுக்கும் நாம் தான் பொறுப்பாளிகள்.
நாம் கோழைகள். எனவே நாம் தான் குற்றவாளிகள்.