Friday, April 23, 2010

பெரியசாமி எங்கே?

நான் திருச்சியில் பள்ளிப் படிப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த பள்ளி பல விதங்களில் பெருமை பெற்றிருந்தது. அனுபவம் மிகுந்த, தரமான ஆசிரியர்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். வருடம் தவறாமல் உயர் எண்ணிக்கையில் தேர்வுகள்.

ஏழாம் வகுப்பில் திடீரென்று பெரியசாமி வந்து சேர்ந்தான். ஆச்சரியம் என்ன என்றால் பெரியசாமி அந்த நாள் வரை பள்ளிக்குப் போனதே இல்லை. படித்ததும் இல்லை. வாய்க்கால் ஓரத்தில் நின்று கொண்டு வருபவர் போவோர்களை வம்பு செய்வதுதான் அவன் முழு நேர வேலை. அவன் அப்பா ஊரில் பெரிய ஆள். ஊரில் இருந்த எல்லா சாராய, கள்ளுக் கடைகளுக்கும் அவர் தான் முதலாளி. ஊரில் ஒரு பய அவன் குடும்பத்தில் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

பெரியசாமியின் அப்பா கோவிந்தசாமிக்கு திடீரென்று ஒரு ஆசை. தான் தான் பள்ளிக்குப் போனதில்லை. தன மகனாவது பள்ளியில் படிக்க வேண்டுமென்று. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து இந்த விஷயத்தைச் சொன்னார். தலைமை ஆசிரியர் மோகன் சார் பதறி விட்டார். ஆனால் சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. கோவிந்தசாமி அவரிடம் "என் மகன் வயசு பசங்க எந்த வகுப்பில படிக்கிறாங்க?" மோகன் சார் "ஏழாவது வகுப்பு!" என்று சொல்லவும், கோவிந்தசாமி, பெரியசாமியை ஏழாவது வகுப்பில் உக்கார வைத்து விட்டுப் போயிட்டார்.

பரிதாபம் என்ன வென்றால், பெரியசாமிக்கு வகுப்புல நடக்கறது ஒரு எழவும் புரியல. பின்னால உக்காந்துகிட்டு நடு நடுல குரல் கொடுப்பான். குரல் வரலேன்னா தூங்கறான்னு அர்த்தம்.


இப்ப என்னன்னா அவன் ஒரு வாரமா வகுப்புக்கு வரதில்ல. தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியரிடம் கேட்டார் "பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்திருக்கிறானா? இல்லையா?" ஆசிரியர் முகுந்தன் மௌனமாக சிரித்தார். அவர் சிரிப்பின் அர்த்தம்: பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன? வகுப்புல வந்து ஒண்ணும் புரியாம உக்காந்திருக்க, வந்தா என்ன வராட்டி என்ன? இதுக்கு ஏன் சார் என்ன கேள்வி கேக்கறீங்க?


Tuesday, April 20, 2010

தண்டனை உறுதி!

கீழுள்ளது நான் ஏற்கனவே எழுதியிருந்தது. நேற்று சுப்ரீம் கோர்ட், தண்டனையை உறுதி செய்து விட்டது. மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை, விகாஸ் யாதவ் மற்றும் டோனி கில்லுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை. வாழ்க மக்கள் நாயகம், வாழ்க நீதித்துறை. செத்தொழிக கேடு கேட்ட அரசியல்வாதிகளின் அவர்தம் குடும்பத்தினரின் ஈனச் செயல்கள்.


Tuesday, November 10, 2009

உயர் சமூகம், அதன் கேடுகெட்ட உறுப்பினர்கள்

மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுதியது:

வினோத் ஷர்மா என்பவன் ஒரு முன்னாள் ஹரியானா மாநில அமைச்சர். அவனோட தறுதலை பிள்ளை மனு ஷர்மா. நண்பர்களுடன் உயர் விலை கார்களில் ஊர் சுற்றுவதும், நாளையும் இரவையும், மதுவுடனும், தரம் கெட்ட மாதர்களுடனும் போக்குவதுதான் இது போன்ற பல உயர் வகுப்பு, பொருளாதாரத்தில் உயர் வகுப்பு தருதலைப்பிள்ளைகளின் பொழுதுபோக்கு.




அது போன்றே ஒரு இரவு திரிந்து அலைந்தவன், ஜெச்சிக்கா லால் என்பவளை சுட்டுக்கொன்றான். அவனுடன் கூடவே இருந்தனர் அமரீந்தர் சிங், அவனுடைய நண்பன் ஆலோக் கன்னா மற்றும் விகாஸ் யாதவ். இதில் விகாஸ் யாதவ் என்பவன் உத்தர் பிரதேசத்தைச்சேர்ந்த ஒரு ராஜ்ய சபா உறுப்பினரின் தறுதலை மகன்.




இக்கொலைக்கு பிறகு, வேறு வழியில்லாமல் மனு போலீசில் சரணடைந்தான். கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தான். பின்னர் தனக்கும் ஜெஸ்ஸிகா லால் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றான். தருதலைப்பிள்ளையின் தரம் கெட்ட அப்பன் சாட்சியங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தான். பிடி பட்டான். தன் அமைச்சர் பதவியை விட்டு விலகினான்.



கொலையாளிக்கு வாதாட விலை உயர் சட்ட நிபுணர்கள். அவனுக்காக வாதாடியது மட்டுமல்லாமல் தரம் கெட்டு பதப்பித் திரிந்தார்கள். மக்கள் முட்டாள்கள் என்றனர். குற்றத்தை திசை திருப்ப முயற்சித்தனர். கேடு கெட்ட காவலர்கள் துணை போனார்கள்.



ஷயன் முன்ஷி என்பவன் கொல்கத்தாவில் ஒரு கண்மருத்துவரின் மகன். உயர் தர பள்ளிகளில் பயின்றவன். கொலையை நேரில் பார்த்தவன். முதலில் பார்த்ததாகச்சொன்னவன், பிறகு மாற்றி மாற்றி பேசினான். பெண்டாட்டியுடன் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றான். விமான மையத்தில் பிடி பட்டான்.



காவலர்கள் சோரம் போனார்கள். வழக்கறிஞர்கள் உண்மை அதாவது அன்னையை விற்கத் துணிந்தார்கள், காசுக்காக. நீதிபதிகள் தடுமாறினார்கள். பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரத்திற்கு பயந்தார்கள். மக்களும், பத்திரிக்கை உலகமும் வெகுண்டு எழுந்தனர். மனு ஷர்மா ஆயுள் தண்டனை பெற்றான். அவன் நண்பர்கள், கொலைக்கு உடந்தையானவர்கள் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.



வினோத் ஷர்மா, தருதலைப்பிள்ளையின் கேடு கெட்ட தந்தை இன்னமும் அரசியல் வியாபாரம் பண்ணிக்கொண்டுதானிருப்பான் என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் எதுவும் சாத்தியம்.

Sunday, April 18, 2010

நரேந்திர மோதி எங்கே, தமிழக முதல்வர் எங்கே?

உலகத்தமிழர்களை உசுப்பியுள்ளார் மோடி - மோதி என்று இருந்திருக்க வேண்டும். பரவாயில்லை. இது இன்றைய தினமலரில் ஒரு தலைப்புச் செய்தி. இச்செய்தியின் படி "வரும் மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநில பொன் விழா துவங்குகிறது. இவ்விழாவை வரும் இருபத்து ஒன்பதாம் தேதி முதல் மூன்று நாட்கள் அமர்க்களமாகக் கொண்டாட குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வருமாறு, நாடு முழுவதும் வாழும் குஜராத்திகளையும், வெளி நாடு வாழ் குஜராத்தியர்களையும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். .......................... சில நாட்களுக்கு முன், குஜராத் மாநில உள்ளாட்சி மற்றும் உணவுத் துறை அமைச்சர் நரோத்தம் படேல் தலைமியிலான குழுவினர் தமிழகம் வந்தனர். சென்னையில் வசிக்கும் குஜராத்தியர்களை சந்தித்து விழாவிற்கு அழைப்பு விடுத்துச் சென்றுள்ளனர். இக்குழுவில் குஜராத் கட்ச் மாவட்ட கலெக்டராக உள்ள தென்னரசன் இடம் பிடித்திருந்தார்".

இது தான் செய்தி. மேலும் தினமலர் நாளிதழ் இந்நடவடிக்கை உலகத்தமிழ் மக்களுக்கு தமிழ் நாடு முதல்வரிடமிருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

எதிர்பார்க்கலாம், தவறு ஒன்றும் இல்லை. யாரிடமிருந்து என்பதுதான் கேள்வி. எதிர்பார்ப்பவர்கள் யார் என்பது தான் கேள்வி. வோட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் எதிர்பார்க்கும் சமுதாயம் ஒன்று தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒரு சூழ்நிலையில் அந்நிய மண்ணின் வாசனை பிடித்தும், தூய தமிழ் மண்ணுக்காக ஏங்கும் எந்த ஒரு தன்மானத் தமிழனும், இன்றைய தமிழ் நாட்டு அரசு சார்ந்த செயல் திட்டங்களில் இணைய விரும்ப மாட்டான். தமிழ் நாட்டின் முதல்வர் யார்? குஜராத் முதல்வர் மோதி யார்? வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தமிழக முதல்வர் மு.கருணாநிதி மூன்று முறை மணம் முடித்தவர்
குஜராத் முதல்வர் நரேந்த்ர மோதி கட்டை பிரும்மச்சாரி

தமிழக முதல்வரின் நேர் உறவினர்களும், விரிந்த உறவினர்களும், பணமும் பெரும் பொருள் லாபங்களும், பற்பல பதவிகளும் ஈட்டியவர்கள், ஈட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நரேந்திர மோதி அவர்களின் தாயார் இன்னமும் ஒரு நடுத்தர சமூகத்தில் ஒரு சாதாரண உறுப்பினராக வாழ்ந்து வருபவர். அவரது சகோதரர் அரசு அலுவலில் இருந்து ஓய்வு பெற்று, இன்றைய தினமும் வெகு மக்கள் போக்குவரத்தில், அதாவது நகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்.


தமிழக முதல்வருக்கு தமிழன் தமிழச்சி என்பதற்கு பொருள், மு.க.ஸ்டாலின், அழகிரி மற்றும் கனி மொழி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தி என்றால், குஜராத் மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு இந்தியனும்.

தமிழக முதல்வருக்கு தன், தன் மக்களின் வளர்ச்சியே தமிழ் நாட்டின் வளர்ச்சி.

குஜராத் முதல்வருக்கு குஜராத்தின் வளர்ச்சியே தன் வளர்ச்சி.

தமிழக முதல்வர் ஒரு சாதாரண நிகழ் கால அரசியல்வாதி.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட உயர் மனிதன்.

மக்களே, குஜராத் முதல்வர் செய்யும் செயல்களை, திராவிட இயக்கத் தலைவரகள், தலைவிகள் ஒரு போதும் செய்து விட முடியாது.

குஜராத் முதல்வர் ஒரு நாட்டுப்பற்று கொண்ட சமுதாயத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஒரு ஊழல் சமூகத்தை உருவாக்கி, தன் வழியில் திருப்பிக் கொண்டிருக்கிறார்.

வாழ்க குஜராத்! வளர்க மோதி அவர்கள் புகழ்!






Monday, April 12, 2010

குஜராத் மாநிலத்திற்கு புகழ்



குஜராத் மாநிலத்தில் இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு நிகழ்ந்த நில அதிர்வுப் பேரழிவைத் தொடர்ந்து Gujarat State Disaster Management Authority, குறுகிய காலக்கட்டத்தில், பேரழிவு கண்ட கட்ச் பிரதேசத்தை வெகு சிறப்பாக புனரமைத்தது. இதைத்தொடர்ந்து இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு அவர்களுக்கு கிட்டிய உலக அளவிலான விருதின் விவரங்களை அவர்கள் ஏட்டின் நகலெடுத்து கீழே கொடுத்துள்ளேன்.

GSDMA has been awarded the GOLD AWARD by the Commonwealth Association for Public Administration & Management (CAPAM) for the initiatives undertaken in governance. The theme for the Fourth Biennial International Innovations Award Programme - 2004 was "Innovations in Governance". GSDMA has taken many innovative approaches on reconstruction and rehabilitation as well as long-term disaster mitigation planning in the State after the 2001 earthquake. With this background, GSDMA applied for the Fourth Biennial CAPAM International Innovations Awards Programme - 2004 with an entry titled "Gujarat Emergency Earthquake Reconstruction Project (GEERP)". CAPAM received 154 submissions worldwide for the theme "Innovations in Governance".



இந்த விருதைப் பெற்றது ஒரு புறம் இருக்கட்டும். GSDMA ஆற்றிய பணி மிகவும் உயர் தரமானது. இதற்கு முக்கிய காரணம், முதல்வர் மோதி அவர்களின் ஆதரவுடன் உயர் நோக்குடன் பணியாற்றிய அரசு அதிகாரிகள். இவ்வதிகாரிகளில் முக்கிய பங்கு ஒரு தமிழருக்கும் உண்டு. அவர் பெயர் திருப்புகழ். பெயரில் புகழும், சிந்தனை மற்றும் செயல்களில் நேர்மையும் ஒருங்கே அமைந்த உயர் தமிழர் அவர். உயர் இந்தியர் அவர். வாழ்க குஜராத் புகழ். வளர்க இம்மாநில நேர்மை உயர் அதிகாரிகள்.

தயவு செய்து தமிழ் நாட்டில் நடக்கும் கேலிக்கூத்துகளை நினைத்து ஒப்பிட்டு வருத்தப்படாதீர்கள். காசுக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு அது போன்று தலைவர்கள் தான் கிடைப்பார்கள். அத்தலைவர்களுக்கு ஊழல் அதிகாரிகள் தான் ஊழியம் செய்வார்கள்.

Sunday, April 11, 2010

போலி மருந்து, காலாவதி மருந்து

தமிழ் நாட்டில் பரபரப்பு. போலி மருந்து விற்பனை. காலாவதி மருந்து புதுப்பிக்கப்பட்டு விற்பனை. மீனாட்சி சுந்தரம் மற்றும் பலபேர் கைது. அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர், விலை உயர்ந்த மருந்துகளை கடத்தினாள், கைது ஆனாள். தினமலரில் தினமும் தலைப்புச் செய்திகள். புகைப்படங்கள்.


நான் மற்றொரு தினம், தினமலர் செய்தித்தாளில், துப்புரவு பணியாளர் தனலட்சுமியின் புகைப்படம் பார்த்தேன். குனிந்த தலை, அவமானத்தால் குறுகிய கண்கள். சூழ்நிலைகளின் ஆளுகைக்கு உட்பட்டு குற்றம் செய்த குறுகுறுப்பு. அதனுடன் கலந்த பயம். தான் செய்த குற்றங்களுடன் இணைந்தவர்களின் பெயர்களை சொல்லலாமா, சொல்லக்கூடாதா என்ற தவிப்பு. இதுதான் இன்று அந்த கடை நிலை ஊழியரின் நிலையாக இருக்கும்.

இதே நிலையில் ஒரு மெத்தப்படித்த உயர் அதிகாரி இருந்திருந்தால், வாய் கிழிய சிரித்து, கை அசைத்து வெற்றிக்களிப்பில் போஸ் கொடுப்பான். வெட்கம் மானமின்றி வேண்டாதவர்களின் சதிஎன்று பிதற்றுவான். இது தான் இன்றைய இந்தியா. இவன்தான் இன்றைய தன்மான இந்தியன்.


நடந்த குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் யார்?

இன்று தினமலர் செய்தித்தாளின் தலைப்புச்செய்தி இதற்கான பதிலை தெளிவாகத் தருகிறது.

தலைப்பு இதுதான்: காலாவதி மருந்து விவகாரம் - போலீஸ் சுகாதாரத்துறை மோதல்.

குற்றச்சாற்று - சுகாதாரத்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மருந்துக் கட்டுப்பட்டு அதிகாரி இளங்கோ தலைமையிலான மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா மற்றும் சஞ்சய் குமாரைப் பிடித்து காலாவதி மருந்துகளைக் கைப்பற்றினர். பின்னர் போலீசில் புகார் அளிக்க தாமதித்தனர். இதை சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். தாமதம் ஏன்?

பொதுவாக இது போன்ற விவகாரங்களில் இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பில் நான் அறிந்தவை இவை: தாமதம் என்றால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். பின்னர் போலீசில் புகார் என்றால், பேச்சு வார்த்தை தங்களுக்கு சாதகமாக இல்லை, அல்லது, விவகாரம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்று பொருள். போலீசில் புகார் செய்வது மட்டுமே சாத்தியம். இதையும் மீறி இன்னொரு காரணமும் இருக்கலாம். இதுவும் பேச்சு வார்த்தை முடிவில் வருவது. மாட்டிக்கொள். வழக்கு நிற்காமல் செய்து விடுவோம்.

நமது இந்திய மக்கள் குடியுரிமை அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் ஊழல் யானைகளை விட்டு ஈக்களையும், கொசுக்களையும் அடிப்பதற்கே நேரத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் செலவு செய்வது அறுபத்து மூன்று ஆண்டுகால சாதனை. தனலட்சுமி ஒரு கொசு. ஊழல் வெறி யானைகளை பிடித்து அடக்குங்கள். சிறையில் அடையுங்கள். பாராட்டுவோம்.

வாழ்க இந்தியா! வளர்க இந்திய மக்கள் குடியுரிமை! வாருங்கள் அடக்குவோம் ஊழல் வெறி யானைகளை!