Sunday, April 11, 2010

போலி மருந்து, காலாவதி மருந்து

தமிழ் நாட்டில் பரபரப்பு. போலி மருந்து விற்பனை. காலாவதி மருந்து புதுப்பிக்கப்பட்டு விற்பனை. மீனாட்சி சுந்தரம் மற்றும் பலபேர் கைது. அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர், விலை உயர்ந்த மருந்துகளை கடத்தினாள், கைது ஆனாள். தினமலரில் தினமும் தலைப்புச் செய்திகள். புகைப்படங்கள்.


நான் மற்றொரு தினம், தினமலர் செய்தித்தாளில், துப்புரவு பணியாளர் தனலட்சுமியின் புகைப்படம் பார்த்தேன். குனிந்த தலை, அவமானத்தால் குறுகிய கண்கள். சூழ்நிலைகளின் ஆளுகைக்கு உட்பட்டு குற்றம் செய்த குறுகுறுப்பு. அதனுடன் கலந்த பயம். தான் செய்த குற்றங்களுடன் இணைந்தவர்களின் பெயர்களை சொல்லலாமா, சொல்லக்கூடாதா என்ற தவிப்பு. இதுதான் இன்று அந்த கடை நிலை ஊழியரின் நிலையாக இருக்கும்.

இதே நிலையில் ஒரு மெத்தப்படித்த உயர் அதிகாரி இருந்திருந்தால், வாய் கிழிய சிரித்து, கை அசைத்து வெற்றிக்களிப்பில் போஸ் கொடுப்பான். வெட்கம் மானமின்றி வேண்டாதவர்களின் சதிஎன்று பிதற்றுவான். இது தான் இன்றைய இந்தியா. இவன்தான் இன்றைய தன்மான இந்தியன்.


நடந்த குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் யார்?

இன்று தினமலர் செய்தித்தாளின் தலைப்புச்செய்தி இதற்கான பதிலை தெளிவாகத் தருகிறது.

தலைப்பு இதுதான்: காலாவதி மருந்து விவகாரம் - போலீஸ் சுகாதாரத்துறை மோதல்.

குற்றச்சாற்று - சுகாதாரத்துறை சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

மருந்துக் கட்டுப்பட்டு அதிகாரி இளங்கோ தலைமையிலான மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் சென்னை எழும்பூரைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா மற்றும் சஞ்சய் குமாரைப் பிடித்து காலாவதி மருந்துகளைக் கைப்பற்றினர். பின்னர் போலீசில் புகார் அளிக்க தாமதித்தனர். இதை சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். தாமதம் ஏன்?

பொதுவாக இது போன்ற விவகாரங்களில் இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பில் நான் அறிந்தவை இவை: தாமதம் என்றால் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். பின்னர் போலீசில் புகார் என்றால், பேச்சு வார்த்தை தங்களுக்கு சாதகமாக இல்லை, அல்லது, விவகாரம் தங்கள் கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது என்று பொருள். போலீசில் புகார் செய்வது மட்டுமே சாத்தியம். இதையும் மீறி இன்னொரு காரணமும் இருக்கலாம். இதுவும் பேச்சு வார்த்தை முடிவில் வருவது. மாட்டிக்கொள். வழக்கு நிற்காமல் செய்து விடுவோம்.

நமது இந்திய மக்கள் குடியுரிமை அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் ஊழல் யானைகளை விட்டு ஈக்களையும், கொசுக்களையும் அடிப்பதற்கே நேரத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் செலவு செய்வது அறுபத்து மூன்று ஆண்டுகால சாதனை. தனலட்சுமி ஒரு கொசு. ஊழல் வெறி யானைகளை பிடித்து அடக்குங்கள். சிறையில் அடையுங்கள். பாராட்டுவோம்.

வாழ்க இந்தியா! வளர்க இந்திய மக்கள் குடியுரிமை! வாருங்கள் அடக்குவோம் ஊழல் வெறி யானைகளை!

No comments: