இந்தியாவில் என்றாவது ஒருநாள் ......................... தொடர்ச்சி
இந்திய
அரசியல் வாதிகளின் ஊழல் பயணம், சுதந்திரம் பெற்று சில வருடங்களிலேயே
துவங்கி விட்டிருந்தன. ஜவஹர்லால் நேரு 47 லிருந்து 64 வரை பதினேழு ஆண்டுகள்
பிரதமர் பதவி வகித்தார். அந்த வருடங்கள் உன்னத வாய்ப்புகளுக்கான
வருடங்கள். அப்பொழுதும் சுதந்திர வேட்கையில்
வீறு கொண்ட இளைஞர்கள் பலர், அறிவு முதிர்ச்சி அடைந்த முதியவர்கள் பலர்
வாழ்ந்து வந்த காலம். ஆனாலும் நேருவுக்கு நாட்டை ஒரு சீரிய வழியில் கொண்டு
செல்வதற்கான வேட்கையும், விவேகமும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு
பணக்காரத் தந்தை இறந்தவுடன், அவரின் சுயநலப் பிள்ளைகள் அவர் விட்டுச்சென்ற
பொருட்களில் ஆசை கொண்டு சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு குடும்ப நிலை. சில
வடஇந்திய மாநிலங்கள் (தற்போதைய உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,
சத்திஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ராஜஸ்தான்) இன்னமும் சுதந்திரம்
பெறுவதற்கான தயார் நிலையில் இருந்திருக்கவில்லை. மனித மேம்பாட்டில் மிகவும்
பின் தங்கி இருந்தனர். ஜாதிப் பிரிவினைகள், பணக்காரன் - ஏழை இடையே பெரும்
பிளவுகள், படிப்பறிவு, ஜனத்தொகை கட்டுப்பாடு, என்று எல்லா விதங்களிலும்
பெரும் பின்னடைவு. இவற்றில் சில பல கண்றாவிகள் இன்னமும் வெகுவாகத்
தொடர்கின்றன. எனினும் அதிக அளவு மக்கள் தொகை காரணமாகவும், பிரதேசங்களின்
விரிவான அமைப்புக்காரணமாகவும், அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்தைப்
பெற்றிருந்தனர், இன்னமும் பெற்றுள்ளனர்.
பின்னர் இந்திய அரசமைப்புக்கு இந்திய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பெரியதோர் சவால். ஆனால் அரியதோர் வாய்ப்பு. சாசன உருவாகத்திற்கு தலைமை வகித்தவர் அம்பேத்கார். நீதித்துறை அறிஞர். குழுவில் இருந்தவர்கள் அனைவரும் நீதித்துறை சார்ந்தவர்கள். என்னுடைய எண்ணத்தில் குறைந்தது ஒரு உலக சரித்திர அறிஞரும், ஒரு சமூக இயல் வல்லுனரும் அவசியம் இருந்திருக்க வேண்டும். அவர்களது பங்களிப்பு, அரசியல் சாசன அமைப்புக்குப் பல வகைகளிலும் உதவியிருக்கும். இன்று நமது அரசியல் சாசனத்தில் இருக்கும் ஊழல்வாதி, மற்றும் குற்றவாளி அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும், பேராசை ஏமாற்று வியாபாரிகளும், எளிதாக குறுகிய சந்தில் வெளியேறி ஓடி விடும் வாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கும்.
மறுபடியும் தலைவர்கள் பேச்சுக்கு வருவோம். லால் பஹாதுர் சாஸ்த்ரி 1965 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்திற்குப் பிறகு, ரேடியோவில் உரையாற்றினார். வாரம் ஒரு நாள், அதாவது திங்கள் கிழமை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உன்ன வேண்டும். நாட்டின் உணவுப் பொருள் சேமிப்பு மிக அவசியம் என்று வலியுறித்தினார். அப்பொழுது எனக்கு வயது 11. எனது அண்ணன், அக்கா, அம்மா, அப்பா அனைவரும் கூடினோம். முடிவெடுத்தோம். விரதம் காத்தோம். பற்பல வருடங்களுக்கு. சாஸ்த்ரி இருந்த பொழுதும். அவர் இறந்த பின்னரும். எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சாஸ்த்ரி இறந்த அன்று எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனது போல் நாங்கள் விக்கி விக்கி அழுதோம். இன்று அன்பர்களே எனக்கு ஒரு தலைவரைக் காட்டுங்கள். அவன் இறந்தால் நாம் துயரமடைவோம் என்று. முக்காவாசி கேசு எப்ப செத்துத் தொலையும்னு காத்துக்கொண்டிருக்கிறோம். ................தொடரும்