Sunday, November 16, 2008

நெஞ்சிலடிக்கும் நீதி

நேற்று தமிழ்நாட்டுச் செய்திகளை கேட்டு, கண்டு, நெஞ்சு கொதித்தேன். என் தமிழ் மண்ணுக்காக விம்மி அழுதேன். தமிழன்னையின் மார்பு மீது தமிழ் இளைஞர்கள் சிலரை, வேறு சில தமிழ் இளைஞர்கள் தள்ளிவிட்டு அவர்தம் நெஞ்சு மீது மிதித்தனர். இவர்கள் அனைவரும் எதிர் வரும் காலங்களில் நீதி மன்றங்களில் நின்று நீதியைப் பாதுகாப்பதற்குத தேவையான் அறிவு தேடும் அன்பு மாணவச்செல்வங்கள். கேடு கெட்ட செயல்.



சில அடிகள் தொலைவில் நமது தமிழ் நாட்டு, நாட்டு மக்களின் பாதுகாவலர்கள், கேட்டும் கேட்காதது போல், கண்டும் காணாதது போல் உயிரற்ற , உணர்வுகளற்ற அசையாப்பொருள் போல் சவ அமைதி காத்தனர். மரங்கள் இருந்திருந்தால் இலைகளை அசைத்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும். நாய் இருந்திருந்தால் பாய்ந்து சென்று சிலரை கடித்திருக்கும். ஆனால் ஒரு காலத்தில் உலகத்தின் தலை சிறந்த பாதுகாவலர்களுக்கு இணையாக கருதப்பட்ட நமது தமிழ் நாட்டுப் பாதுகாவலர்கள், அந்நியனாய், அநியாயமனவனாய், கொடூரமானவனாய், கோழை கோமாளியாகி, தமிழ் நாட்டுக்கும், தமிழனுக்கும் இழுக்கு வர வைத்தனர்.



இவர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். செய்யச்சொன்னதை சரியாக செய்ததற்காக, அந்த இட மாற்றம் சரியான பரிசாகவும் இருக்கலாம். உண்மையில் அபராதமாகவும் இருக்கலாம். ஆனால் இது போதாது. இந்த அநீதியை, காட்டுமிராண்டித்தனத்தை, கல்லூரி வாயிலில் அரங்கேற்றிய மாணவர்களும், மாணவர்களல்லாத கைகூலிகள் மட்டுமன்றி, அங்கு நின்ற பாதுகாவலர்களும் கடுமையாகத் தண்டிக்கப்ப் பட வேண்டும்.



இது மட்டுமல்ல. கல்லூரியின் முதல்வர், கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். விசாரணைகள் முடிந்து நியாயமான தீர்ப்பு கிடைக்கும் வரை தமிழ் நாட்டு முதல்வர், கலைஞர், தன் 'நெஞ்சுக்கு நீதி' எழுதுவதையும், பிரசுரம் செய்வதையும், விற்பனை செய்வதையும் முழுமையாக நிறுத்த வேண்டும்.



ஏனென்றால், தமிழகம் ஒரு அமைதிப் பூங்கா என்று பாராட்டிப் பாராட்டிப் பின்னர், உண்மையில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று இது போன்ற நிலைக்குத் தள்ளியதில் பெரும் பங்கு இந்த திராவிடர்களின் பெயரில் ஆரம்பித்த இக்கழகங்களையே சாரும்.

No comments: