வருடம்: 1982
இடம்: திருச்சி டவுன் ஏரியாவுல தெப்பக்குளத்துக்கும் பர்மா பஜார் கடைகளுக்கும் இடையே நடந்து, புள்ளையார் கோவில் தாண்டி, மாயவரம் லாட்ஜுக்கும், மதுரா லாட்ஜுக்கும் இடையே உள்ளே முக்கு.
சுதாகர் வேகமாக ஓடி வந்தான். மூச்சு இரைக்க இரைக்க, "அண்ணே! ஆக்சிடெண்டு ஆயிடுச்சு அண்ணே, நீங்க வந்து கொஞ்சம் அவுங்கள்ட்ட பேசி என்னோட வண்டிய மீட்டுக்கொடுத்துடுங்க அண்ணே" என்று சொல்லி முடித்தான்.
நானும் நெஞ்சை நிமிர்த்தி, லாவகமாக, மீசையை முறுக்கி விட்டபடி அவனுடன் நடந்தேன். ஐந்து அடி செல்லவும், எனக்கு ஞாபகம் வந்தது. சுதாகருக்கு வண்டி ஓட்ட தெரியாதே. அவன் கிட்ட ஒரு டூ வீலர் கூட கிடையாதே. பிரச்சனை என்ன என்று யோசித்தேன். இருந்தாலும், அவனிடம் கேள்வி கேட்டால், நான் பயப்படுகிறேன் என்று நினைத்து விடுவானோ என்று தோன்றியது. எனவே கேள்வி எதுவும் கேட்காமல் அவனுடன் வேகமாக நடந்து ஆண்டாள் தெருவில் நடந்தேன்.
மதுரா லாட்ஜு தாண்டி, ஒரு பத்தடி போயிருப்போம். மலைக்கோட்ட கோவில் யானை நின்னு வேகமா தும்பிக்கைய ஆட்டிக்கிடுக்கிட்டுருந்தது. அது மேல யானைப் பாகன் உக்காந்திருந்தாரு.
சுதாகரைப் பார்த்ததும், "சாரை சப்போர்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிறீயா?" என்று கேட்கவும் நான் ஆச்சரியத்துடன், கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இருபது வயசு இளைஞன் சுதாகரைப் பார்த்தேன்.
நடந்தது என்ன என்று நான் விவரிக்கிறேன். சுதாகருக்கு இது வரைக்கும் சைக்கிள் ஓட்டக்கூட தெரியாது. இப்பதான் பழக ஆரம்பிச்சுருக்கான். கொஞ்சம் தையிரியம் வரவும், ஆண்டாள் தெருவிலிருந்து, மலைக்கோட்டை பக்கம் செல்லும், சரிவுப்பாறையில் ஏறியிருக்கிறான். திரும்ப இறங்கும்போது வண்டி வேகம் பிடித்து விட்டிருக்கிறது.
ஆண்டாள் தெருவில் அந்தப்பக்கம் நிக்குது யானை. அரண்டு மிரண்டு, விட்டான் நேரே சைக்கிள - யானை ஆட்டிக்கிட்டுருந்த தும்பிக்கைக்கும் கால்களுக்கும் நடுவே. சுவற்றில் சைக்கிளை மோதி யானையின் காலுக்காருகே விழுந்தான் சுதாகர்.
யானைப்பாகன் கேட்டார் : "என்னாப்பா பட்ட்டப்பகலுல, இவ்ளோ பெரிய யானை நிக்கறது உன் கண்ணுக்குத் தெரியல?"
எழுந்து நின்ன சுதாகர் சொன்னான் "யானை நல்லாத்தெரியுதுப்பா. சைக்கிள்ள பிரேக்கு எங்கன்னுதான் தெரியல"
யானைப்பாகன் கிட்ட பேசி, சுதாகர் சைக்கிள மீட்டுக்கொடுத்த கதை வெறும் கொசுறு.