Sunday, June 22, 2008

பகுத்தறிவு பிரநிதிகள்

நான் அதிகம் டி.வி.பார்ப்பதில்லை. ஆனால் பார்த்த பொழுதெல்லாம் புல்லரித்துப் போய்விட்டேன். பார்த்தவை சிறப்பு மிகு தமிழ் மையங்கள். அவை அனைத்தும் கழகங்களின் பகுத்தறிவு பிரச்சார மையங்கள் என்று நான் நினைத்து ஏமாந்தேன். அவைகள் சன் டி. வி, கலைஞர் டி.வி., மற்றும் ஜெயா டி.வி. கதாநாயகன் வெளியில் கிளம்புகிறான். பூனை குறுக்கே ஓடுகிறது. கதாநாயகன் கடத்தப்படுகிறான். என்னவொரு பகுத்தறிவு வெளிப்பாடு. ஒவ்வொரு பகுத்தறிவு தமிழனும் புல்லரித்துப் போயிருப்பான். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. தினம் தினம் மெகா சீரியல்கள் பல பார்த்தால் பகுத்தறிவு பெரிதும் வளர சிறப்பான வாய்ப்புகள் உண்டு.
எல்லா சீரியல்களிலும் குடும்பம் சிரமப்படும்போது மிக விமரிசையாக தெய்வ வழிபாடுகள் கட்டாயம் உண்டு. சாமிகள் மட்டுமல்ல பட்டாடை தரித்த ஆசாமிகளும் நல்வழி கட்டுவார்கள்.
இது மட்டுமல்ல. ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இக்கழக கண்மணிகளின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை நேரில் கண்டது மட்டுமல்லாமல் பற்பல இன்னல்களுக்கும் ஆளானவன். பேருந்துலிருந்து இறக்கப்பட்டு இளவயது அக்காவைக் கூட்டிக்கொண்டு நான்கு கிலோ மீட்டர் ஓடியிருக்கிறேன் சிறுவயதில். இன்று ஒரு பகுத்தறிவாளரின் டி.வி. யில் ஒரு நிகழ்ச்சியின் பெயர்: "கானா குயில் கானா". ஹிந்தியில் கானா என்றால் பாட்டு. வாழ்க நமது ஹிந்தி ஒழிப்பு.
அடுத்து, தமிழன் என்று தன்னை சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவன் பார்ப்பன விரோதியாக இருக்கவேண்டும். அறுபதுகளில், ஒரு பார்ப்பனனாக ஸ்ரீரங்கத்தில் என்னுடைய பூணூலை காப்பாற்றிக்கொள்ள நான் பட்ட பாடு. பார்ப்பனர்களை நன்னோக்கில் காட்டினால் பார்ப்பனர்களின் viewership கூடும் என்கின்ற அறிவு கூர்மை தெளிவாகத் தெரிகிறது இன்று. வியாபாரம் படுத்தும் பாடு அய்யா.
வாழ்க தமிழ். வளர்க தமிழன்.

No comments: