விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது. கம்ப்யூட்டர் வரவும் , செல் ஃபோன் வரவும், சாதாரண இந்தியனின், குறிப்பாக தமிழனின் வாழ்வை நன்முறையில் வெகுவாக பாதித்தது. கிராமத்த்தில் விவசாயம் செய்து, வருமானம் குன்றி, வறுமையில் வாடிய விவசாயியின் மகன் பொறியியல் படித்தான். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் வல்லுனனான். அமெரிக்காவும், இங்கிலாந்தும் பறந்து சென்றான். பகுத்தறிவு பிரச்சாரம் வியாபாரம் ஆகவில்லை. பல லட்சம் குவித்த தமிழன் கூடவே குறைவில்லாமல் கவலைகளையும் குவித்தான். கோவில்கள் பெருகின. சாதிக்கொரு அரசியல் கட்சி போலவே, சாதிக்கொரு சாமியாரும் உருவெடுத்தார். கோவில்களும் சாதிச் சாயம் பூசிக்கொண்டன.
பகுத்தறிவு பாது காவலரகள், நாத்திக சாமியார்கள் எலெக்ட்ரானிக் மீடியம் துணையுடன் இக்காலத்தில் நன்கு விற்கக்கூடிய, பக்தியை விற்க ஆரம்பித்து விட்டார்கள். மூட நம்பிக்கைகளை முன்னே வைத்து, உலக தமிழர்களை அணுக ஆரம்பித்து விட்டார்கள். தொலைக்காட்சிகளில் இவர்கள் தொல்லை தாங்க வில்லை.
ஒரு கழகக்கண்மணி அலை வரிசையில், ஒரு சீரியலில், நாயகி முக்கியமான வேளையாக வெளியே போகும்போது பூனை அவள் பாதையில் குறுக்கிட்டு காரியத்தைக் கெடுக்கிறது. கழகக்கண்மணிகளின் மிகப்பெரும் மூத்த தலைவன், பகுத்தறிவின் நாயகன், நெஞ்சுக்கு நீதியை தேடிக்கொண்டே இருப்பவர், அவர்தம் அலை வரிசையில் நாயகி மனத்துயரம் கொண்டு மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து மணியடிக்க, பூ விழுகிறது. அதுவும் சிகப்பு, செம்பருத்திப்பூ. அம்மன் ஒரு வயதான பெண்மணி உருவில் வந்து நல்ல சொல் சொல்கிறாள். நாயகி புல்லரித்துப் போகிறாள்.
என்ன ஒரு வளர்ச்சி! பகுத்தறிவு வியாபாரத்தில் துவங்கி இன்று பக்தி, பக்தி என்று கடவுள் நம்பிக்கை கொண்ட நான் சொல்ல மாட்டேன், மூட நம்பிக்கை வியாபாரம் நன்கு வளர்ந்து விட்டது. பகுத்தறிவிலும் பணம். பக்தி என்ற பெயரில் பகுத்தறிவு குன்றிய நம்பிக்கைகளிலும் பணம்.
வாழ்க தமிழன். வளர்க அவனது பகுத்தறிவு!
No comments:
Post a Comment