இதற்கு முன்னரும் எழுதினேன். தமிழன் செத்து மடிகி்றான் இலங்கையில். தமிழ் அரசியல் வாதிகளும், மற்றும் பலரும், நாடகம் ஆடுகிறார்கள், பசப்பித் திரிகிறார்கள் என்று. நம்பிக்கைக்குரிய தகவல் இன்று சொல்லுகிறது - இருபது ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் விதிகளுக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலை இயக்கமும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம். அதுவல்ல இன்று என்னுடைய வாதம்.
வெறி பிடித்த இலங்கை அரசு, நாட்டு விரோத அமைப்பை ஒழிக்கிறோம் என்ற பெயரில், முழுவதுமாக அறிந்தே, முன்னேற்பாடுகளுடன், தமிழ் இனத்தை, இலங்கை மண்ணில், அதன் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன், தனது ராணுவத்தை கட்டவிழ்த்து விட்டது. தரம் கெட்ட, இலங்கை அரசை தன விரிவான குடும்பத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல் படும் ராஜ பக்சே, ஒரு தேர்ந்த அரசியல்வாதி. புலிகள் அமைப்பை அழிப்பது அவன் முதல் நோக்காக இருப்பினும், இதை காரணம் காட்டி, தனது மேலும் பெரிய துணை நோக்கான, தமிழ் இன எண்ணிக்கையை தம் நாட்டில் குறைப்பது என்பதில் பெரும் வெற்றி அடைந்துவிட்டான்.
ராஜா பக்சே, மற்றும் அவர்தம் ராணுவ அமைச்சர், ராணுவ தளபதி, மேலும் பலர் உண்மையில் உலகக் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நான் முன்னமே சொன்னேன் - பெரும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது என்று. மேலும் சொன்னேன், உலக அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், கண் பொத்திக்குருடர்களாக, காது மூடி செவிடர்களாக, வாய் மூடி ஊமைகளாக வேடிக்கை பார்க்கிறார்கள் என்று.
அது போகட்டும். நமது உடன்பிறப்புகள், தமிழ் நாட்டில் தமிழ்த் தியாகிகள், தமிழர்களுக்காக, அவர்தம் நலன்களுக்காக, பல முறை, மீண்டும் மீண்டும் உயிர் துறந்தவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே கட்டில், மெத்தை மீது, குளிர் சாதனப் பெட்டிகள் சூழ உண்ணா விரதம் இருந்தார்கள். சங்கிலிப் போராட்டம் நடத்தி நாள் கணக்காக தொலைக்காட்சிப் பெட்டிகளில் பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.
நெருங்கி வந்து விட்டது தேர்தல். நேரம் எங்கே நம் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழனைப் பற்றி யோசிக்க, மற்றும் செயல் பட? தலைவர்கள் ஒட்டுக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். தலைவர்களின் தலைவர் பிள்ளைக்காகவும், பெண்ணுக்காகவும் பதவிக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டில் சாதாரணத் தமிழனும், இலவசப் பொருள்கள் பெற்று, தலைவர்கள் போக்கில் சென்று, இலங்கைத் தமிழனை மறந்தான். ஓட்டுகளை குவித்தான். தமிழ்த் தலைவர்கள் இன்று வெற்றிக் களிப்பில் உலா வருகிறார்கள். பேரம் பேசி பதவிகள் பெற்றார்கள்.
இலங்கையில் தமிழனா? எங்கே இருக்கிறது இலங்கை? எங்களுக்கு தெரிந்ததெல்லாம் டெல்லி மாநகரம் தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் அங்கு இருக்கும் நாற்காலி தான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நாற்காலியுடன் இணைந்த செல்வாக்கு, அதிகாரம், கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் வாய்ப்புகள் தான்.
கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன:
விருந்து முடிந்த பின், விழுந்த இலைகளை
நக்கிடும் நாய்க்கும், நாளொன்று கழியும்
நாளைக்கழிப்பதே நானிலப் பிறப்பெனில்
வாழ்வென தாழ்வென வருவன சமமே
No comments:
Post a Comment