ஒருபுறம், பொது மக்கள், மற்றும் பொதுச்சொத்துக் காவலர்கள். மறு புறம் நீதியின் காவலர்கள். இரு அணிகளும்,தமிழ் நாட்டின் தலை நகரில், நீதி மன்றத்தில் மோதிக்கொண்டது கண்கொள்ளாக் காட்சி. தமிழனை தலை குனியச்செய்யும், கேவலமான செயல்.
ஐம்பது வருட கழகங்களின், தனிப் பெரும் சாதனை. கழகங்கள் அனைத்தும் இணைந்து, தமிழனின் நாகரீகத்தை பல முறை எரித்து, மீண்டும் மீண்டும் தமிழர்களின் தனிப்பெரும் பிரதிநிதிகளாக உருவாகும் உண்மை நிலை.
சில மாதங்களுக்கு முன்னாள், சட்டக்கல்லூரியில் நடந்த கொடுமைகளையும், அவற்றைக் கண்டும் காணாமல், செயலற்று நின்று, கவுரவம் காத்த காவலர்களையும், நாம் இன்னும் மறந்துவிடவில்லை.
அக்கிரமத்தை தடுத்து நிறுத்தாமல் கண்கள் மூடி, கைகள் இறுக, மௌனம் சாதித்த காவலர் சிலர் நாளை, உயர் அதிகாரிகளாக பதவிகள் பல பெறலாம். ஆயுதம் ஏந்தி, சக மாணவர்களை மிதித்து துவைத்தவர்கள் நாளை, பப்ளிக் ப்ராசிக்யூட்டரர்கள் ஆகலாம். கல்லெறிந்து, தடியால் அடித்து, தீ வைத்த சட்ட வல்லுனர்கள், நாளை நீதிபதிகள் ஆகலாம்.
அன்று நாம், சாதாரண மக்கள், கோழைத் தனத்தால் அஹிம்சா வாதியானவர்கள், அக்கிரமங்களை கண்டும் காணாமல், கேட்டும் கேட்காமல், அன்றாட உணவு தேடும், புழு பூச்சிகள், ஒடுக்கப்போடுவோம். நசுக்கப்படுவோம். அநியாயங்கள் இழைக்கப்படுவோம். நமது கோழைத்தனத்திற்கு நாளை நமக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்.
வாழ்க இந்தியா! வளர்க சுதந்திரம்!