Tuesday, July 28, 2009

மைதானத்துல படுக்க வைத்து

தப்பான பக்கம் நம்ம வண்டிய முந்தி போயி, கொஞ்சம் கூட எதிர் பார்க்காம, வலது பக்கம் வண்டிய ஓடிச்சு நிறுத்தினான். வண்டிக்கு போட்டேன் பிரேக். இதயத்துடிப்புக்கு பிரேக் போட முடியல. நாக்கு நுனி வரைக்கும் வந்திடுச்சு ரொம்ப ரொம்ப கெட்ட வார்த்த. அம்மாவும், பொண்டாட்டியும் கூட இருந்ததனால சைலென்ட் ஆயிட்ட்டேன்.
மேல இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் போயிருப்போம். இடது பக்கம் ரோடு ஓரத்துல சின்ன கூட்டம். அதைத்தாண்டி போயி வண்டிய பார்கிங்க்ல நிறுத்திட்டு அம்மா, பொண்டாட்டி இறங்க கதவ திறந்து விட்டேன். அவங்க நடந்து கடைக்குள்ள போனதும் நான் வண்டிய விட்டு இறங்கி, கூட்டத்தை நோக்கி நடந்தேன்.
அந்த இடத்தை அடைந்ததும், கூட்டத்திற்கு இடையே தலையை நுழைத்து உள்ளே பார்த்தேன். வயதான மனிதர், தலையிலிருந்து ரத்தம் வழிய இறந்து கிடந்தார். விசாரித்ததில் தெரிந்தது, வீதி ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவரை, தவறான் பக்கம், அதாவது சாலையின் வலது புறம் வண்டியை ஓட்டி வந்து, பெரியவர் மீது மோதி, கொன்று, வேகமாக வண்டி ஓட்டி மறைந்து விட்டான்.
பெரியவர் மரணத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த காரணம் ஒன்றே ஒன்று தான். நம் நாட்டில் ஊறிப்போன ஊழல் தான் இதற்கெல்லாம் காரணம். குறிப்பாக வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸ் வழங்கும் துறை. ஊழலில் அளவே இல்லாமல் ஆழமாக வேருன்றி, அதில் ஈடுபட்டவர்களுக்கு சிறிதும் வெக்கமில்லாத அளவுக்கு, வெகுவாக பரவி நிற்கிறது.
நான் பார்த்த அநியாயத்தை நான் பார்த்ததும் எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான். ஓட்டுனர் லைசென்ஸ் ஊழல்வாதிகள் எல்லோரையும் ஒரு பெரிய மைதானத்தில் படுக்க வைத்து, லைசென்சு இல்லா ரோடு ரோல்லர...........................

Sunday, July 19, 2009

அப்பு குப்பு உரையாடல் 7

அப்பு: என்ன குப்பு, பிளேனுல எப்பவாவது போயிருக்கியா?

குப்பு: என்னாண்ணே இப்படி கேட்டுட்டீங்க! இலவச வேட்டி சட்டை, இலவச டீவீ, அதுமாதிரி இலவச விமான பயணம்னா கண்டிப்பா போயிருப்பேன். கலைஞர் தான் அது மாதிரி எதுவும் பண்ணல. அண்ணன் ஸ்டாலின் பண்றாரான்னு பாப்போம்.

அப்பு: பன்னாடை! இலவசம் இலவசம்னாகாணாமப்போச்சு தன்மானம்னு அர்த்தம். சரி. அத வுடு. அதெல்லாம் தன்மானம் இருக்குறவங்களுக்கு மட்டும் தான். நம்ம இந்திய நாட்டின் விமானக்கம்பெனி ஏர் இந்தியால என்ன ஆயிட்டிருக்குன்னு தெரியுமா?

குப்பு: கேள்விப்பட்டேன் அண்ணே. வேலை பாக்கறவுங்களுக்கு குடுக்க சம்பளம் இல்லையாம். கம்பெனி திவாலா ஆயிடுச்சா அண்ணே?

அப்பு: உன் கேள்விக்கு பதில் நான் அப்பறம் சொல்றேன். நான் இப்ப சொல்றத கவனமா கேளு. ஒரு கம்பனின்னா அதோட முக்கிய குறிக்கோளா இருக்க வேண்டியது மொத்த வியாபாரம், வளமான வியாபாரம். நல்ல இலாபம். இது இரண்டும் ரொம்ப அவசியம். எந்த ஒரு முதலாளியா இருந்தாலும், வியாபாரம் சின்னதா இருந்தாலும் சரி, பெரிசா இருந்தாலும் சரி, இந்த இரண்டு குறிக்கோள்களையும எந்நாளும் மறக்கக் கூடாது.


வியாபாரம் என்பதும், இலாபம் என்பதும் எந்த ஒரு பிஸிநெஸ்லியும் புனிதமான வார்த்தைகள். வியாபாரம் இல்லைன்னா, முதலாளியும் பிழைக்க முடியாது, தொழிலாளிகளும் பிழைக்க முடியாது. உதாரணத்துக்கு எடுத்துக்கோ, டாட்டா, பிர்லா, மிட்டல், நம்ம ஊரு டி.வி.எஸ். அவுங்க, அதிகமா சம்பாதிக்க சம்பாதிக்க அதிகமான பணம் முதலீடு. அதோட, சேர்ந்து பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு. முடிவில் பார்த்தால் முதலாளி என்பவன் பல ஆயிரம் கொடிகள் சம்பாதித்தாலும், அவன் நம் சமூகத்துக்கு திருப்பிக் கொடுப்பது அதை விட அதிகம்.

நாராயண மூர்த்தி வெறும் பத்தாயிரம் முதலீடு செய்து ஆரம்பித்தார் கம்பெனி. அவர் உருவாக்கிய நிறுவனம் இன்று நேரடியாக ஒரு இலட்சம் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. அதாவது குடும்பத்தில் நாலு பேர் கணக்கிட்டால், நான்கு லட்சம் மக்களுக்கு உண்ன உணவு, உடை, இருப்பிடத்திற்கு ஆதாரம். நல்ல வியாபாரம் இல்லாமல், நல்ல இலாபம் இல்லாமல் எப்படி நடக்கும் இதெல்லாம்.
அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களின் பொறுப்பான செயல்கள். நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் வேலையில் உயர் ஈடுபாடு. தனி மனித வளர்ச்சியை நிறுவனத்தின் வளர்ச்சியோடு இணைப்பதின் வெளிப்பாடு. நிறுவனம் வளர, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வளர்கிறார்கள், அவர்கள் குடும்பமும் செழிப்படைகிறது.
அரசு முதலாளியானால், அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு அலட்சியம். மெத்தனம், மற்றும் ஊழல் செய்வதில் கவனம். அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கும் பொறுப்பு கிடையாது. நிறுவனம் எக்கேடு கேட்டு போனா என்ன? மக்களின் பணம், வரிப்பணம். வரி கட்டுபவர்களில் பெரும்பாலோனார் ஒட்டு போடாத பொழுது, அவர்களது வரிப்பணம், வரிப்பணம் கட்டாதவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல் கட்சியினால் வாரி இறைக்கப்படுகிறது. எனவே அரசியல் வாதிகளுக்கும் கவலை இல்லை. அவர்களை தேர்ந்தெடுத்த பெருவாரியான மக்களுக்கும் கவலை இல்லை.
அந்த வரிப்பணத்தில் சம்பளம் பெற்று, வேலை பார்க்காமல் வயிறு நிரப்பும் அதிகார வர்க்கத்திற்கும் வெட்கம் இல்லை. வரிப்பணம் கட்டாத, கட்டுவதை விட அதிக உரிமை பெரும் வர்க்கத்திற்கும் வெட்கம் இல்லை.
நான் சொன்ன இது போன்றவை தான் ஏர் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமென்றால், எச்.எம்.டி., போல் ஐ.டி.பி.எல். போல் மேலும் விழலுக்கு இறைத்த நீராகாமல், ஒரு வீழ்ந்த நிறுவனத்தின் முடிந்த கதையாகிப்போகட்டும்.

Friday, July 17, 2009

மோதி ஒரு முற்போக்குவாதி

குஜராத் மாநில முதலமைச்சர் திரு.நரேந்திர மோதி ஒரு முற்போக்குவாதி. பல மாநிலங்களிலும், பற்பல நாடுகளிலும், அவரைப்பற்றிய ஒரு முழுவதும் தவறான எண்ணமே உலாவுகிறது. கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறை, அவர் தம் அரசால் தூண்டி விடப்பட்டது, மோதி ஒரு மத வாதி, இஸ்லாமியருக்கு விரோதி, இஸ்லாமியரை இந்தியர்களாக ஒப்புக்கொள்வதில்லை, இது போன்று பற்பல குற்றச்சாட்டுக்கள். ஆனாலும் , மீண்டும் மீண்டும் தேர்தல்களில் வெற்றி பெற்று , முதலமைச்சர் ஆனார். குஜராத்தில் பல தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்படுகிறார்.
இரவும் பகலும் அயராமல் உழைக்கிறார். மந்திரிகளுடனும், பல்வேறு அதிகாரிகளுடனும் ஏறக்குறைய அன்றாடம் உரையாடி, மாநிலத்தின் நிலைமைகளை அறிந்து கொள்கிறார். ஒரு தனி மனிதன், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக புரையோடியிருக்கும் மெத்தனத்தையும், ஊழலையும் வேரோடு அறுத்தெறிந்து விட முடியாது. ஆனால் மோதி விடா முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் இது தெளிவாகத் தெரிகிறது.
அவருக்கு, மூன்று என்ன, ஒரு மனைவி கூட இல்லை. மகன்கள், மகள்கள் இல்லை, மைத்துனர்கள் இல்லை. அவர்களுக்காக பதவிகள் வேண்டி நாட்டின் பிரதம மந்திரி தலைவாயிலில் மண்டி போட்டு மன்றாட வேண்டியது இல்லை.
சமீப காலங்களில் அவர் தன் உண்மை நிலையை வெகுவாக வெளிக்கொணர ஆரம்பித்து விட்டார். அவரது தாரக மந்திரம், கர்வமான குஜராத்தின் வளர்ச்சி. அதற்கு வேண்டியது திறமைசாலிகள். எத்துறையாயிருந்தாலும் சரி. எந்த மாநிலத்தவராயிருந்தாலும் சரி. எம்மதத்தினவராயிருந்தாலும் சரி. மூன்றாம் முறை முதலமைச்சரானதும், இஸ்லாமியர் ஒருவரை, மாநிலத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக நியமித்தார். இப்பொழுது வரவிருக்கும் பஞ்சாயத்துத்தேர்தல்களில் பா.ஜ.பா சார்பில் போட்டியிட ஐந்து இஸ்லாமியரை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.
மோதி ஒரு மத வாதி அல்ல. அவர் ஒரு ஞானி. அவர் ஒரு தேசப்பற்று கொண்ட குஜராத்தி, மற்றும் இந்தியர். பதவிக்காகவும், பரந்து விரிந்து கிடக்கும் பற்பல குடும்ப உறுப்பினர்களையும், தவறான முறைகளில் கொழுத்த பணக்காரர்களாகவும், உயர் பதவியாளர்களாகவும், ஆக்குவதிலேயே தன் வாழ் நாள் முழுவதையும் கழித்து, பின்னர் தள்ளாத வயதிலும், பதவியைப்பிடித்துக்கொண்டு, இன்னமும் என்னென்ன ஊழல்கள் செய்யலாம் என்று திட்டம் தீட்டும், இந்திய அரசியல்வாதிகள் இடையே மோதி ஒரு இரத்தினம்.

Thursday, July 16, 2009

தலை சிறந்த இந்தியர்

இ.ஸ்ரீதரன் என்பவர் ஒரு தலை சிறந்த இந்தியர். குறிப்பாக இநதிய நாட்டின் தலைநகரில் வாழும் ஒரு தலை சிறந்த ஒரு தென்னிந்தியர். அவரது திறமை மற்றும் முயற்சிகள் இன்று இந்திய நாட்டின் தலை நகரில் வாழும், செல்லும் பல லட்சம் மக்களுக்கு ஒரு தலை சிறந்த, மிக்க முன்னேறிய நாடுகளுக்கு இணையான, போக்குவரத்தாக ஒளிர்கிறது. மெட்ரோ ரெயில் என்பது அதன் பெயர். மெட்ரோ ரெயில் அமைப்பதில், எந்த விதமான இடையூறும் வராமல், எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் மற்றும் அரசியல்வாதிகளின் குறுக்கீடையும் அனுமதிக்காமல் சாதனை படைத்தவர்.
மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு கட்டுமானத்தில் இருந்த தூண் ஒன்று இடிந்து விழுந்து ஆறு பேர் மரணம் அடைந்தனர். நிமிடம் கூட யோசிக்காமல் உடனே தன் பதவியை விட்டு விலகத்துணிந்தார். அவரல்லவோ தன்மானத்திற்கு உதாரணம். தன்மானம் தான் தனக்கு எல்லாம். தன்மானம் என்பது உயிரை விட மேலானது என்று பசப்பித் திரிந்து கொண்டு, குற்றங்கள் தெளிவாக அவர்களது என்று வெளிப்பட்டாலும், பொய்கள் பல பேசி, சிறிதும் அவமானமின்றி பதவியை விடாமல் பற்றித் திரியும் அரசியல்வாதிகள் வாழும் இந்திய நாட்டில், ஸ்ரீதரன் ஓர் உன்னத மனிதர். நாட்டுப்பற்றை நாடியாக மதிக்கும் தமிழன்பனின் பணிவான வாழ்த்துக்கள் அய்யா, மனித குல மாணிக்கம் ஸ்ரீதரன் அவர்களுக்கு.

தமிழனுக்குத் தலை குனிவு

கடந்த பத்து வருடங்களில் தமிழ் நாடு விட்டு வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழருக்கு இரண்டு முறை மிகப்பெரும் தலை குனிவு ஏற்பட்டது. இரண்டு முறையுமே இதற்கு காரணமானவர், தமிழன் தன்மானத்தை உலகெங்கும் நிலை நாட்டுவதற்காகவே தன் வாழ் நாளை முழுவதுமாக அர்ப்பணித்த தமிழ்ப் பெரும் தலைவர், எப்பொழுதுமே நெஞ்சுக்கு நீதி தேடும் கலைஞர் கருணாநிதி தான்.


எப்படி என்று கேட்கிறீ்ர்களா. முதல் முறை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடு இரவில் அவர் கைதான போது. நடு இரவில் கைது செய்தது, ஒரு பழி வாங்கும் செயல்தான். ஆனால் தன்மானத் தலைவர், அஞ்சா நெஞ்சம் கொண்டவர், கதறிய கதறல் - இவை அனைத்தும் நள்ளிரவில், பளபளக்கும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில். பற்பல இந்திய டீவீக்களில் இக்காட்சி மாறி மாறி ஒளிபரப்பப்பட, மற்ற மாநில மக்களிடையே மற்றும் வெளி நாட்டு மக்களிடையே உட்கார்ந்து பார்க்கும்பொழுது, மாற்று மக்கள் காமெடி ஷோ பார்த்ததுபோல் விழுந்து விழுந்து சிரிக்க, தமிழன் வெட்கித்தலை குனிய வேண்டி வந்தது.


இரண்டாவது தலை குனிவு, கடந்த தேர்தல் முடிந்த பிறகு. தலைவர், தன் இரு மனைவிகளையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் மைத்துனர் மகனுக்கும், சொந்த மகனுக்கும் பதவி வேண்டி நடத்திய கெடுபிடி பேரம். நண்பர்கள் சொன்னார்கள் "உங்க ஆளு, லல்லு, முலாயம், மாயாவதி எல்லாரையும் மி்ஞ்ஜிட்டாருய்யா. எப்படி விடாப்பிடி பிடிச்சு வாங்கிட்டாரு பதவி." பதில் சொல்லத்தெரியாமல் தலை குனிந்தான் தமிழன். நிலைமையை மேலும் சீர் செய்ய மற்றொரு மகனை தமிழ் நாட்டின் இணை முதல் அமைச்சர் ஆக்கியது அவர்களுக்கு தெரியாது.

Monday, July 6, 2009

அப்பு குப்பு உரையாடல் 6

அப்பு: குஜராத்தில பாத்தியா என்னாச்சுன்னு?

குப்பு: கள்ளச்சாராயம் குடிச்சாங்க, செத்தாங்க! நாலு பேரு செத்தாதாண்ணே மத்தவங்களுக்கு புத்தி வரும்.
அப்பு: நீ சொல்றது ரொம்ப குரூரமா இருக்கு. நான் ஒப்புக்க மாட்டேன். முதல்ல கேளு. விஷயம் என்னான்னா, செவ்வாக்கிழம சாராயம் குடிச்சு, புதன்கிழம பலபேரு செத்த பிறகும், புதன் மேலும் வியாழக்கிழம, சாராயம் சுளுவா சகஜமா வித்திருக்கு. அந்த தினங்கள்ல குடிச்சவங்க வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் செத்துப்போனாங்க.
குப்பு: ஆச்சரியமா இருக்கே!
அப்பு: இதிலென்ன ஆச்சரியம். புதன் கிழம நிகழ்ச்சிக்குப் பிறகு, வியாழன் வெள்ளில போலீசு ரொம்ப பிசியா இருந்தாங்க.
குப்பு: இருக்க மாட்டாங்களா பின்ன. ரெய்டு நடத்துறதுல, மேலும் அசம்பாவிதம் நடக்காம தடுக்கரதுல.
சத்தமாக சிரித்தார் அப்பு.
குப்பு: ஏங்க அண்ணே சிரிக்கறீங்க?
அப்பு: சுறு சுறுப்பா இருந்தது உண்மை. ஆனா எதிலன்னு கேளு. தனக்கு தன்னோட வேலைக்கு என்ன பாதிப்பு வரும்னு கண்டுபிடிக்கரதுல. யாருக்கு என்ன குடுத்து தன்னயும், தன் வேலையும் பாதுகாத்துக்கணும்கரதுல. இதெல்லாம் இந்திய ஜன நாயகத்துல ரொம்ப ஆழமான விஷயம் குப்பு. உன்ன மாதிரி சாதாரணமான நேர்மையான இந்தியனுக்கு இதெல்லாம் விளங்கறது ரொம்ப கஷ்டம்.

அப்பு குப்பு உரையாடல் 5

அப்பு: நேத்து ராத்திரி ஒன்பது மணி சுமாருக்கு உன்கிட்ட என்ன சொன்னேன்?
குப்பு: நேத்து நைட்டு நீ சொன்னது, இன்னிக்கு காலம்பர எப்படி ஞாபகம் இருக்கும்? என்னைப்பொருத்த வரைக்கும், உண்மை இந்திய குடி மகன்னா, இப்ப கேட்டத அடுத்த நிமிஷம் மறந்துடணும். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும். இல்லேன்னா உன்ன மாதிரி, எப்பவோ யாரோ சொன்னதல்ல ஞாபகம் வச்சிக்கிட்டு குழப்பம் தான் மிஞ்சும். உதாரணத்துக்கு கேளு. அரசியல்வாதிங்க அவுங்க சொல்றத, சில நாட்கள்ல அவுங்களே மறந்துடறாங்க. அவுங்க சொல்றதெல்லாம் நாம ஞாபகம் வச்சுக்கிட்டா நம்ம கதி என்ன ஆகும்.
அப்பு: விளையாட்டு போதும் குப்பு. நேத்து ராத்திரி நான் உன்கிட்ட சொன்னேன். இன்னிக்கு நியூஸ் பேப்பர்ல படிச்சு நானே ஷாக் ஆயிட்டேன். நான் ரொம்ப மதிப்பு வச்சிருக்கிற தலைமை நீதிபதியே சொல்லிட்டார். அமைச்சர் அய்யா டிறேக்டா நீதிபதி அய்யா ரெகுபதி கிட்ட பேசலையாம். எதிர்கட்சி வக்கீல் சொன்னாராம் அமைச்சர் பேசுறாருன்னு. எப்படி கேசு பிசு பிசுத்துப் போச்சு பாத்தியா.

Sunday, July 5, 2009

அப்பு - குப்பு உரையாடல் 4

அப்பு: புரிஞ்சிதலே குப்பு! ஊர்ல திருட்டு நடந்தா, முதல்ல போலிசுக்குத்தான் தெரியும். ஆளும் கட்சி உறுப்பினர் தப்புத் தண்டா பண்ண, முதல்ல எதிர் கட்ச்சிக்குத்தான் தெரியும். இதுதான் ரூலு. இதுதான் நடைமுறை.
குப்பு: அண்ணே! அண்ணே! இவ்ளோ பெரிய விஷயத்த இம்புட்டு சுளுவா புரிய வச்சிட்டிங்களே.
அப்பு: அது சரி, கலைஞர் ராஜாட்ட பதில் சொல்லச் சொல்லி இருக்கிறாரே படிச்சியா? அதுக்கு என்ன அர்த்தம் புரியுதா?
குப்பு: என்ன அர்த்தம் அண்ணே?
அப்பு: மவுனம்னா சம்மதம்னு அர்த்தம். உடனே மறுத்துச்சொல்லுன்னு அர்த்தம். அதுவுமில்லமா, அவுரு அராஜா, அதாவது ஏ.ராஜா அவரோட பேக்ரவுண்டு தெரியுமா? அவுருக்கு முழு சப்போர்ட்டு, கலைஞரோட மூணாவது மனைவி, அவுங்களோட மக கனிமொழி. அவுங்களுக்கு எதிரா தலைவரால ஒண்ணும் பண்ண முடியாது. ராசாவ சப்போர்ட்டு பண்ண வேண்டியது கலைஞரோட கடமை, தல விதி, அதுதான் அவரு நெஞ்சுக்கும் நீதி. புரியுதா குப்பு?
குப்பு: மேற்கொண்டு என்ன நடக்கும்னு
அப்பு: ஒண்ணும் நடக்காது, சிங்கால இந்த பட்ஜெட்டு பரிந்துரை நேரத்துல யாரோடயும் விரோதம் வச்சுக்க முடியாது. இதைத்தவிர, அரசு தரப்புலேருந்து நீதித்துறைக்கு எந்த எந்த விதமான வற்புறுத்தல்கள் வரும் என்பதை கணிக்க முடியாது. சுருக்கமா சொல்லனும்னா, இது வரைக்கு ஜகத்ரக்ஷகன் கேசுல என்ன நடந்ததோ அதுதான், இதிலயும் நடக்கும்.
குப்பு: வாழ்க அநீதி ராஜாக்களின் ராஜாங்கம்.

Friday, July 3, 2009

அப்பு குப்பு உரையாடல் 3

அப்பு, குப்பு மற்றும் வேறு வாடிக்கையாளர்கள் டீக்கடையில்

வாடிக்கையாளர்: தெரியுமாடா சேதி. நேத்து ராத்திரி ஆறுமுகம் வீட்டை கொள்ளை அடிச்சுட்டனுகளாம். நூத்தி இருபது பவுன் தங்கம், அம்பதாயிரம் ரொக்கம் கொள்ளை போயிடுச்சாம்.

வாடிக்கையாளர்: இந்த கணக்கு, ஆறுமுகம் வீட்டுக்காரங்க சொல்றது. உண்மையா கொள்ளை போனது எம்புட்டுன்னு யாருக்குத் தெரியும்?

அப்பு: மெதுவாக குப்புவிடம் "போலிசுக்கு மட்டும்தான் தெரியும்"

குப்பு: என்ன சொல்ற நீ?

அப்பு: ஏன்? நம்ப முடியலையா? நான் எல்லா போலீசையும் சொல்லல. ஆனா இந்தியாவுல, இந்த மாதிரி ஊர்கள்ல, எந்த குத்தவாளியும், போலீசுக்குத் தெரியாம எதுவும் செய்ய முடியாது.

குப்பு: நம்ப முடியலையே அப்பு.

அப்பு: இதுக்கு மேல சொல்றேன் கேளு. சில போலீசு காரங்களுக்கு குத்தம் நடக்கறதுக்கு முன்னையே இனஃபார்மேஷன் போயிடும்.


குப்பு: இன்னமும் என்னால இத நம்ப முடியல அப்பு.

அப்பு: எப்பவும், இந்தியால எல்லா எடத்திலயும், எப்பவும், இப்படித்தான் நடக்கறதுன்னு நான் சொல்ல வரல. ஆனா பல இடங்களில, பல நேரங்கள்ல இப்படித்தான் நடக்கிறது என்பது உண்மை.


குப்பு: உண்மையாவா!

அப்பு: நான் ஒரு தடவ மத்தியப் பிரதேச மாநிலத்தில, ஒரு வேலையா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப நான் கேட்ட ஒரு நிகழ்ச்சியக் கேளு. ஜபல்பூர் பக்கம்னு ஞாபகம். நடு ராத்திரில, அஞ்சு பேர் வழி மறிச்சு, ஒரு பஸ் பயணிகளை கொள்ளை அடிச்சிருக்காங்க. கலெக்க்ஷன் முடிஞ்ச பிறகு, மொத்த வசூல எண்ணிப்பாத்தவங்க, எல்லாப்பணத்தையும் பயணிகள்டயே கொடுத்துட்டு எறங்கிப் போயிட்டங்கலாம்.

குப்பு: என்ன அப்பு? என்ன சொல்ல வர? கிறுக்குத்தனமா இருக்கு.

அப்பு: குப்பு, இதப் புரிஞ்சிக்கறதுக்கு புத்திசாலித்தனம் வேணும். உனக்குப் புரியாது. பஸ்சில கெடச்ச மொத்த கலெக்க்ஷன், அவங்க போலீசுக்கு குடுக்க வேண்டிய கமிஷன விட ரொம்ப கொறச்சல். அது தான் விஷயம். அதனாலதான் வண்டிய விட்டு இறங்கரப்போ டிரைவருக்கு வார்னிங் குடுத்தாங்கலாம். அங்க இங்க வண்டிய நிறுத்தாம நேரா ஊருக்குப் போன்னு.



அப்பு குப்பு உரையாடல் 2

அப்பு: செல்வி உண்மையை போட்டு உடைச்சிட்டாங்க பாத்தியா.

குப்பு: எந்த செல்வி? எந்த உண்மை?

அப்பு: செல்வின்னா எந்த செல்வின்னு உலகத்துக்கே தெரியும். தமிழ் நாட்டுல இருக்கிற உனக்கு தெரியலையே! சரி போகட்டும். எந்த உண்மைன்னு வேற கேக்கற. ஒரு உண்மைதான் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சாகணும். அது நீதிபதி அய்யா ரெகுபதி சொன்ன அமைச்சர் யாருங்கறதுதான்.

குப்பு: அவுங்க சொலறது உண்மைன்னு உனக்கு எப்படி தெரியும்?

அப்பு: குப்பு. நீ விவரமே தெரியாத ஆளுய்யா. நம்மூரு அரசியல்ல எதிரெதிர் கட்சில இருந்தாலும், அங்க நடக்கறது இங்க தெரியும், இங்க நடக்கறது அங்க தெரியும். இன்னும் தெளிவா சொல்லனும்னா, தி.மு.. விஷயம் கலைஞருக்கு தெரியரதுக்கு முன்னாடியே செல்விக்கு தெரிஞ்சுடும். அதே போல, ...தி.மு.. விஷயம், செல்விக்கு தெரியரதுக்கு முன்னமே கலைஞருக்கு தெரிஞ்சுடும். இது பேரு தான் அரசியல்.

குப்பு: அப்ப செல்வி ஜெயலலிதா அவுங்க சொல்றது சரிதாங்கரீயா? அமைச்சர் ராஜா தான் குற்றவாளிங்கரீயா?

அப்பு: விஷயம் நீதித் துறையிலேருந்தோ, அமைச்சகதிலேருந்தோ வர வரைக்கும் முடிவா எதுவும் சொல்ல முடியாது. ஆனா, அமைச்சர் ராஜா குற்றவாளியா இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்கள் நெறைய இருக்கு.

குப்பு: சுவாரசியமா இருக்கே. சொல்லு அப்பு.

அப்பு: குப்பு, வா பக்கத்து கடையில போயி, சூடா ஒரு கப் டீ அடிச்சிட்டு வந்து பேசுவோம்.



Wednesday, July 1, 2009

அப்பு - குப்பு உரையாடல் 1

அப்பு: சபாஷ், சபாஷ்!
குப்பு: யார இப்படி சபாஷ் சபாஷ்னு பாராட்டிக்கிட்டு இருக்க?
அப்பு: எம்புட்டு தெஹிரியமா பேசியிருக்காரு நம்ம ஊரு ஜட்ஜு ரெகுபதி!
குப்பு: ஆனா அவுரு மினிஷ்டரு பேரச் சொல்லலியே.
அப்பு: அதுதான் குப்பு நாகரீகம். ஓபன் கோர்ட்டுல, ஒரு உண்மையச் சொல்லும்போது, அதையும் ரொம்ப நாகரீகமாச் சொல்லி இருக்காரு. அதுக்குத்தான் டபுள் சபாஷ்.
குப்பு: இப்ப என்ன நடக்கும்! மினிஷ்டரு யாருன்னு தெரியுமா? அவுர மந்திரி சபையிலேருந்து நீக்குவாங்களா?
அப்பு: இது ஒரு சிக்கலான கேள்வி.
குப்பு: இதில என்ன இருக்கு சிக்கல்.
அப்பு: விவரம் புரியாம இருக்கியே அப்பு. மொய்லி சொன்னத கவனமா படிச்சுப்பாரு. எல்லாம் புரியும். சுருக்கமா சொல்லணும்னா, இதுவும் இன்னொரு ஜகத்ரக்ஷகன் கேசுதான். கமிட்டி, கமிட்டிக்கும் கமிட்டி, இதெல்லாம் முடியறதுக்குள்ள ரெகுபதி சாரும் ரிடயறு ஆயிடுவாரு, மந்திரி சபையும் காலாவதி ஆயிடும்.
குப்பு: குடியரசு நாடு, குடியரசு நாடுன்னா என்னன்னு புரிய வைக்க இது போல எவ்வளோ உதாரணம் இருக்கு அப்பு.