Saturday, June 27, 2009

சின்னஞ்சிறு கதைகள் 1

சிற்பி ஒருவர் சிற்பம் செதுக்கிக் கொண்டிருந்தார். அருகில் சென்று ஒருவர் அவர் கலைச்செயலை, அவர் தம் ஈடுபாட்டை உன்னிப்பாக கவனித்தார். பின்னர், அவர் திரும்பிப் பார்த்த பொழுது மெல்ல அவரிடம் கேட்டார்.
"என்ன சிலை செய்துக்கிட்டு இருக்கீங்க?"
"பிள்ளையார் சிலை" என்று பதில் வந்தது.
மீண்டுமொரு கேள்வி "இந்த சிலையை எங்க வைக்கப்போறீங்க?"
பொறுமையாக பதில் சொன்னார் கலைஞர் "அந்த கோபுரத்தின் உச்சியில், வலது பக்கத்தில்" என்று சுட்டிக் காட்டினார்.
தற்செயலாக கவனித்த பார்வையாளர் "பக்கத்துல பிள்ளையார் சிலை இன்னொண்ணு இருக்கே, மறுபடியும் ஏன் பண்றீங்க?" என்று கேட்டார்.
"இதுவா! இது ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்று சொன்னார்.
பார்வையாளர் மறுபடியும் "யாரு ரிஜெக்ட் பண்ணாங்க?"
"நான் தான்"
"ஏன்?"
"ஒரு தவறு ஆயிடிச்சு"
கூர்ந்து கவனித்த பார்வையாளர் "கண்ணுக்குக் குறை ஒண்ணும் தெரியலையே!" என்றார்.
கலைஞர் "பிள்ளையாரோட தும்பிக்கைல, நடுல ஒரு சின்ன கீறல் விழுந்துடிச்சு" என்றார்.
உற்றுப்பார்த்த பார்வையாளர் "இவ்வளவு பக்கத்திலேர்ந்து பாக்கற ஏன் கண்ணுக்குக் தெரியல, அவ்வளவு உயரத்தில வச்ச பிறகு யாருக்குத் தெரியும்?" என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சிற்பி "இரண்டு பேருக்குத் தெரியும். எனக்கும், பிள்ளையாருக்கும்" என்று கூறி முடித்து கவனமாக சிலை செதுக்குவதைத் தொடர்ந்தார்.

No comments: