Saturday, August 15, 2009

யாருக்குச் சுதந்திரம்?

இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் அறுபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுதந்திரம் கிடைத்தது உண்மை. பெரும் முன்னேற்றம் கண்டதும், காண்பதும் உண்மை. ஆனால் இந்த அறுபத்தி இரண்டு ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சுதந்திரம் அடைந்த வர்க்கம் சில இருக்கின்றன. முக்கியமான சில:
௧. ஊழல் அரசியல்வாதிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௨. அவர்களை முழுதும் சார்ந்து வியாபாரம் நடத்தும், கள்ள, கீழ்த்தர வியாபாரிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௩. ஊழல் அரசியல்வாதிகளுக்கும், கள்ள வியாபாரிகளுக்கும், முழுதாக துணை சென்று பெரும்பொருள் ஈட்டும் ஊழல் அதிகாரிகளும் அவர்தம் குடும்பத்தினரும்.
௪. மிதமான அறிவு, மிகக்குறைந்த துணிவு, அதிக அளவு பயம் கொண்டு, அவ்வப்பொழுது அவர்கள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளை பொறுக்குவதில் பெருமை கொள்ளும், பெருவாரியான மக்கள்.
இவர்களுக்கு இருக்கும் சுதந்திரம், உண்மையான குற்றவாளிகளுக்குக் கூட கிடையாது. பிக் பாக்கெட், செய்பவனுக்குக்கூட பயம் உண்டு. பிடி படலாம். அடி உதை விழலாம் என்று. ஆனால் அவனிடம் கமிஷன் வாங்கி அவனைத்தப்பிக்க விடும் போலீசுக்கு எந்த பயமும் கிடையாது. பிக் பாக்கெட் செய்யும் ரவுடி பயந்து செய்வான் தன் தொழில். ஆனால் அவனிடம் கமிஷன் வாங்கும் போலீசுக்கு எந்த விதமான பயமும் கிடையாது. வாங்கற கமிஷனை வெட்கமில்லாமலும், அதிகார தோரணையுடனும் வாங்குவான். வெகு சுதந்திரமாக வாங்குவான். வாங்கும் அவனுக்கும் வெட்கம் கிடையாது. அப்பணத்தை செலவு செய்யும் அவன் குடும்பத்தினருக்கும் வெட்கம் கிடையாது.
அரசியல்வாதியின் கணக்கை கேட்க வேண்டாம். அவன் குறிக்கோள் நாட்டின் நன்மை கிடையாது. நாட்டைக்கெடுத்து, மக்களின் நலன்களை கெடுத்து தனக்கும், தன் விரிவான குடும்பத்தினருக்கும், பதவி, புகழ், பணம், தேடுகிறான். அவனுக்கு வழி வகுத்துக்கொடுப்பவன் மிக்கப் படித்த, பெரும் அறிவு கொண்ட உயர் நிலை அதிகாரிகள். அவர்களுக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையில் பங்கு பெறும் சுதந்திரம் உண்டு.
சாதாரண இந்தியன், முதுகு எலும்பு இன்றி பிறந்த உண்மை இந்தியன், இவற்றை கண்டும் காணாதது போல், கேட்டும் கேட்காதது போல், வேலைக்கு தினம் சென்று, உணவு தினம் உன்று, மெகா சீரியல் தினம் பார்த்து, வாழ்க்கையில் பரவச நிலை அடையும், புனிதமான உயிர் நிலை. அவனுக்கு சுதந்திரம் பற்றி கவலை இல்லை. அவனுடைய சுதந்திரம் கோலங்களிலும், தங்கமான புருஷனிடனும் ஆரம்பித்து, செல்வியில் முடிவடைந்து விடுகிறது.
வாழ்க இந்தியா! ஒழிக இவர்கள் சுதந்திரம்!

No comments: