இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தினத்தில் எனக்கு ஞாபகம் வந்தது, காந்திஜி மட்டுமல்ல. சுதந்திர இநதியாவின் வக்கிரமான வெளிப்பாடாக என்னால் உணரப்பட்ட சிலரும் ஞாபகத்துக்கு வந்தனர். அவற்றில் முக்கியமான ஒருவன் சந்தன கடத்தல் வீரப்பன். ஏன் அவன் ஞாபகத்துக்கு வந்தான் என்று விவரிக்கிறேன்.
கூஸ் முனிசாமி வீரப்பன் கர்நாடகத்தில் பிறந்து, பின்னர் கர்நாடக, தமிழ்நாடு, கேரளா காடுகளில் கொலோச்சியவன். மூன்று மாநில எல்லைகளிலும் துணிவாகத்தன் கூட்டத்துடன் திரிந்தவன். செய்த கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், அதற்கான ஈடாக பெற்ற கோடிகள் எக்கச்சக்கம். அவன் கையில் உயிர் இழந்த அப்பாவிகள், அப்பாவி போலீஸ் அதிகாரிகள் பலர்.
அவன் கொள்ளையடிக்க, கொள்ளையடிக்க, கொலைகள் செய்ய, லாபம் பெற்றவர் அவனும், அவன் கூட்டத்தினர் மற்றும் அல்ல. மூன்று மாநிலத்திலும், குறிப்பாக தமிழ் நாட்டில் அவனால் கொள்ளை லாபம் பெற்ற உயர் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், - வட்டத்திலிருந்து அமைச்சர் வரை பற்பலர். அதன் காரணத்தினாலேயே வீரப்பன் இருபது வருங்களுக்கும் மேலாக காடுகளில் கோலோச்ச முடிந்தது.
கடைசியாக, அக்டோபர், பதினெட்டாம் நாள், இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு, அவன் கதை முடிக்கப்பட்டது. உண்மைதான், அவன் உயிருடன், அவன்தம் உண்மைக் கதை முடிக்கப்பட்டது. அவன் சொல்லாமல் சென்ற கதைகளும் அவனுடன் முடிந்து விட்டன. அவன் உயிருடன் பிடிபட்டு இருந்தால், அவனுக்கு உண்மை பேசும் சுதந்திரம் இருந்திருந்தால், இன்று நமது சுதந்திரக்கொடி ஏற்றி அதன் முன் பெருமையாக போஸ் கொடுத்த பல தலைவர்களும், அதிகாரிகளும், போலீஸ் துறையினரும், சிறையில் அமர்ந்து களி தின்னும் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கல்லாம். இது நடந்திருந்தால் நானும் இன்றைய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடி இருப்பேன்.
அதுவன்றி, சுதந்திரம் இந்தியாவில் யாருக்கு என்ற பெரிய கேள்வியுடன் பெரும் பாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.
வாழ்க இந்தியா! ஒழிக ஊழல்வாதிகளின் சுதந்திரம்!
1 comment:
hi
Post a Comment