மேல படியுங்க முழுசா புரியும்.
ஊர்: ஸ்ரீரங்கம், விலாசம்: காந்திநகர், வருஷம்: 60 - 65 மாதங்கள்: ஏப்ரல் - ஜூன்
கிழமை: ஞாயிறு முதல் ஞாயிறு வரை நேரம்: மதியம் சுமார் ஒரு மணி
குமார்: வாங்கடா, நேரா எல்லாரும் ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு போலாம்.
வெங்கடேஷ்: ஆமாண்டா, அது தாண்டா சரி, நேத்தே நான் பாத்தேன், மாங்காஎல்லாம் முத்திப் போச்சுடா. இன்னும் ரெண்டு நாள் உட்டா பழுத்துடும், அப்புறம் மாமியே பரிச்சுடுவா. நமக்கு கெடைக்காது.
சுரேஷ்: இந்த தடவ நான் மரத்துல ஏற மாட்டேன். நான் வேணா காம்பவுண்டுக்கு வெளில நின்னு காட்ச் புடிக்கறேன்.
ராசு: அதெல்லாம், அங்க போய் பாத்துக்கலாண்டா.
குமார்: சரிடா! ராகவா, நீ வீட்லேர்ந்து ஒரு சின்ன கத்தியும், கொஞ்சம் உப்பும் எடுத்திக்கிட்டு நேரா வெங்கடேஷ் வீட்டு மாடிக்கு வந்திடு.
நாங்க நாலு பெரும், துணைக்கு தமிழன், கருவண்டு, குண்டன் துணையோட ஹோ அண்ட் கோ மாமியாத்துக்கு படை எடுத்தோம்.
அவர்கள் வீட்டை அடைந்ததும் குமார், எங்கள் எல்லோரிலும் பெரியவன் எல்லோருக்கும் அவரவர் பங்கை விவரிக்க ஆரம்பித்தான். குண்டன், பாட்ராச்சாரியார் வீட்டுப் பக்கம். அங்கிருந்து கொண்டுதான் மரத்தின் உச்சியிலிருந்து வீசி எறியப்படும் மாங்காய்களை லாவகமாகப் பிடிப்பான். தமிழன் அவன் பின்னாடி நின்னு எண்ணி கூடையில எடுத்து வைப்பான். கருவண்டு, தெருவுல வேற யாரும் வந்தா கவனமா இருந்து குரல் கொடுப்பான்.
குமார் குனிஞ்சு நிக்க, அவன் முதுகு மேல ஏறி வெங்கடேஷ் சுவத்துக்கு வெளியில வளந்திருக்கிற கிளைய புடிச்சு குரங்கு மாதிரி தாவி மரத்துல ஏறுவான்.
சுரேஷுக்கு வேலை வெளிக்கதவுக்கு பக்கத்துல நின்னுக்கிட்டு மாமி வெளிய வந்த குரல் கொடுக்குற வேலை. சுளுவான வேலை. ஏன்னா மாமி சாப்பாடு சாப்டுட்டு அசந்து தூங்கற நேரம்.
ஏழெட்டு முத்தின மாங்கா சேர்ந்திருக்கும்.
வெங்கடேஷ் மர உச்சிலேருந்து லேசா குரல் குடுத்தான். டேய்! நாலஞ்சு பழம் இருக்குடா.
குமார் பதிலுக்கு சொன்னான் - தூக்கி எறியாதடா, கெட்டுப்போயிடும், சட்டையை கயட்டி அதுல கட்டிக்கோ.
வெங்கடேஷ் சொன்னபடியே செய்தான்.
சுரேஷ் கவனமாக வீட்டு வாசற்புறம் இருந்த தோட்டத்தை பாத்துக்கிட்டு இருந்தான். திடீர்னு, வீட்டு பின் பக்கத்திலேருந்து யாரோ வர மாதிரி நிழல் தெரிந்தது. உணர்வதற்கு முன்னர் மாமி மரத்தடியில் நின்றிருந்தாள்.
சுரேஷ் மாமி என்று கத்தவும், வெங்கடேஷ் கழட்டிய சட்டையில் மாம்பழத்துடன் இறங்கும்போது, பிடி தவறி, மாமியின் காலடியில் தொப்பென்று விழுந்தான். அவன் கழுத்தைப்பிடித்து தூக்கினாள் மாமி.
சுரேஷ், ராசு, குமார், குண்டன், தமிழன், கருவண்டு எல்லோரும் பறந்து மறைந்தனர், அம்புட்டுகிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு.............................