Wednesday, September 26, 2012

இந்திய நாட்டு வரலாறு 1
 இந்திய நாட்டு வரலாறு என்று  சொன்னாலே நாம் ஒவ்வொருவரும்  படிப்பதும், கேட்பதும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்:

இந்திய வரலாறும், பண்பாடும், மிகுந்த அளவில் செழிப்பும், வளமும் கொண்டதாக இருந்தது.  அதன் தாக்கம், இன்றைய  சமூகக் கோட்பாடுகளிலும் ஊறி வளர்ந்திருக்கிறது என்று நான் சொன்னால் மிகையாக இருக்காது. பல்லாயிரமாண்டு காலங்களாக, பரந்து விரிந்த ஆட்சியமைப்புகள், வணிகத்துறை வாயில்கள், இந்து சமவெளி நாகரிகங்கள் என்று பல்வேறு வளர்ச்சிகளுக்கும், வளங்களுக்குமாக மேற்கோள் காட்டப்பட்ட நாடு நம் பாரத நாடு. உலகத்தின் நான்கு பெரு மதங்கள் இங்கு தான்  உருவாயின. ஹிந்துத்துவம், புத்தம், சமணமதம், மற்றும் சீக்கியம் இம்மண்ணில் தான் உருவாகி வளர்ந்தன. மேலும் பாரசீக மதம் சார்ந்தவர்கள், யூதர்கள், மற்றும் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும், இம்மண்ணில் வந்திருந்து இந்நாட்டு குடியுரிமையுடன் பல நூற்றாண்டுகளாக, இம்மண்ணின் புதல்வர்களாகவே பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். நம்நாடு, பாரதநாடு பல்வேறு பண்பாடுகளையும், பழக்க  வழக்கங்களையும் உள்ளடக்கி ஒரு  உன்னத  நாடாக உருவானது. 1947 ஆம் வருடத்தில் இந்திய நாடு, ஆங்கிலேயரின் அடிமைத் தளையிலிருந்து   விடுபட்டு,  சுதந்திரக் காற்றை சுவாசிக்க  ஆரம்பித்தது. ஒரு முன்னேற்றப்பாதை நாடாக பரிமளித்தது. 

 இதுபோன்ற உன்னதப் பின்னணியில் உருவான  ஒரு நாடு இப்பொழுது  உலக அரங்கில் எவ்வாறு பரிமளித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்த்தால் நமக்கெல்லாம் வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். சிறு வயதிலிருந்தே நான் சரித்திரப் பாடத்தை  மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். என் நண்பர்கள் என்னை ஒரு விநோதப் பிராணியாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் அப்பொழுதும் திண்ணமாக இருந்தேன். நமது நாட்டு வரலாறைப் படிப்பது மிக சுவாரஸ்யமானது  மட்டுமல்ல, மிக  அவசியமானதும் கூட என்று நான் நம்பினேன்.

200 ஆண்டுக்க்ளுக்குப் பின்னர் நமது சந்ததியினர், நமது இப்போதைய வரலாறைப் படித்தால் எப்படியிருக்கும், என்று சற்றே எண்ணிப் பார்த்தால் நல்லது என்று தோன்றியது. ஒரு  சிலர் கணிப்புப்படி,  பரவலாக  உலாவி வரும் வதந்திப்படி,  2012 டிசம்பரில்  உலகம் அழியாமல் இருந்தால், நமது சந்ததியினர் இந்தியாவைப் பற்றி என்ன படிப்பார்கள். ஒரு கற்பனை. நிஜமாகக் கூடிய கற்பனை:

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர்  இந்திய நாட்டை வெகுவாக நாகரிக வேடம் போட்டு  மெத்தப் படித்தவர்களும், மழையிலும் பள்ளிப் பக்கம் ஒதுங்காத எழுத்தறிவு இல்லாதவர்களும், ஒன்றே கூடி அரசியல்வாதிகள் என்கின்ற பெயரில் சுரண்டினர்.  கூட்டுக் கொள்ளை அடித்தனர். சுமாராகப் படித்தும், வெகு அளவில் படித்தும்  பட்டம் பெற்றவர்கள் பலர் அரசு அலுவலர் என்கின்ற பெயரில் அரசியல்வாதிகளில் கொள்ளைகளுக்குத்  துணை போயினர். மொத்தக் கொள்ளையில் தன பங்கைப் பெற்று பாராட்டி வாழ்த்தினர். தொழிலதிபர்கள் என்று பொய்ப்பெயரிட்டு இருவருக்கும் துணை போயினர் இன்னும் பலர்.

இதற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் நாட்டு எல்லைகளுக்குள் நுழைந்து 'கிழக்கிந்திய கம்பெனி' என்னும் போர்வையில் சிறுகச் சிறுக முழு நாட்டையும் தன வசமாக்கினர். நாட்டின் வளங்களைச் சுரண்டினர். சாதாரண இந்தியன் அவனிடம் ஆயுள் கால வூழியனாகி, அடிமையாகி அவனுக்குச் சேவைகள் பல செய்து வயிறு வளர்த்தான்.

இவர்களிடையே குஜராத் பகுதியில் போர்பந்தர் என்னும் நகரில் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்றொரு இளைஞர் இருந்தான். நன்கு படித்து பின்னர் சட்டம் பயின்றான். தெற்கு ஆப்பிரிக்காவில் ஒரு இந்திய இஸ்லாமியரின் சார்பில்  வழக்கில் வாதாடச் சென்ற இந்த இந்தியன், கருப்பன், புகை வண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ததற்காக, புகைவண்டிப் பெட்டியை விட்டு தான் கொண்டு சென்ற பெட்டியுடன் நள்ளிரவில் வெளியே தள்ளப்பட்டான்.

அவனுக்குத் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வாய்ப்பு தரப்பட்டது. மற்ற எந்த ஒரு இந்தியனாக இருந்திருந்தாலும் தானுண்டு தன வேலையுண்டு என்று வேலை முடித்து நாடு திரும்பியிருப்பான். எம். கே. காந்தி அப்படிச் செய்யவில்லை. இளைஞர் வெகுண்டெழுந்தார்.
 'நான் இவ்வேறுபாட்டை எதிர்ப்பேன், இதற்காகப் போராடுவேன்' 
யாரை எதிர்த்துப் போராடுவார்? உலகத்தில் பாதிக்கு மேல் தன ஆளுகையில் வைத்திருக்கும் ஆங்கிலேயரை எதிர்த்து. பல நல்லெண்ணம் கொண்டவர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றனர். அவர் அமைதியடைய விரும்பவில்லை. ஆங்கிலேய அரசை எதிர்ப்பதென்று ஒரு அதீத முடிவுக்கு வந்து விட்டிருந்தார்.

சில பத்து இந்தியர்களைக் கூட்டி வைத்து பொது இடத்தில் அரசுத்தாள்களைத் தீயிலிட்டார். அவர் அடித்து உதைக்கப் பட்டார். பற்பல முறைகள் சிறையிலடைத்துத் துன்புறுத்தப் பட்டார். ஆனால் அவர் அடங்குவதாக இல்லை. மாறாக அவரின் போராட்டம் மேலும் மேலும் வளர்ந்தது.
'இந்தியாவை விட்டு வெளியேறு' என்று கூக்குரலிட்டார்.

கத்தியின்றி, ரத்தமின்றி போராடுவோமென்றார்.  
வன்முறையற்ற, ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். ஆனாலும் ஒன்று இங்கு தெளிவு படுத்தியாக வேண்டும்.  அவரால் இது போன்ற ஒரு இயக்கத்தை ஆங்கிலேயருக்கு எதிராக நடத்தியும் உயிர் வாழ முடிந்தது. அவர் குடும்பங்களும், மற்றப் போராளிகளின் குடும்பங்களும் உயிர் வாழ்ந்தன. உலகத்தில் பல பகுதிகளை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் பெருமளவு தனி மனித நாகரிகம் காத்து வந்தனர். ஆனால் இதே நாட்டில் பின்னர் சுதந்திரம் கிடைத்த பிறகு, ஆட்சியாளர்களின் குற்றங்களைத் தட்டிக் கேட்பது பெரும் ஆபத்தான விஷயமாக ஆனது. குற்றங்களைத் தட்டிக் கேட்பவர்களை நாட்டு விரோதிகள் என்றும், வெளிநாட்டு ஊடகர் என்றும் முத்திரையிட்டு, முடிந்தால் துன்புறுத்தினர்.

இக்காலக்கட்டம் குறிப்பாக விவசாயிகளுக்கும், உடலுழைப்பை மட்டுமே மூலதனமாக்கிப் பாடுபட்டு, ஊதியம் பெறுவோருக்கும் ஒரு சோதனையான காலமாக இருந்தது. பொருளாதார வசதிகளில் கீழ்நிலைக்காரர்களும், நடுநிலைக்காரர்களும் 'அன்றாட மான மரியாதைக்குரிய வாழ்வுக்கும்',
'தன குழந்தைச் செல்வங்களின் ஆசாபாசங்களுக்கும்' இடையில் சிக்கிப் பரிதவிப்பு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

தங்கள் அன்றாட வாழ்வை முறையாக வாழ்வதற்கு, தங்கள் கடும் உழைப்பில் பெற்ற வருமானத்தில், பற்பல வகையான வரிகளை செலுத்தி வந்தனர். இவ்வரிப்பணத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் மேலும் பல ஊழல்கள் செய்து பொதுமக்களைத் துன்புறுத்திப் பணம் பெற்றதை வழக்கமாகவே கொண்டிருந்தனர். சாதாரண மனிதன் முதுகெலும்பு ஒடிந்தவனாக, தவறுகளைத் தட்டிக்கேட்கத் திராணியற்றவனாக, பொறுமை என்கின்ற பொய்யான பெயரில், அசாதாரண சகிப்புத்தன்மையுடன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவர்களுக்கும் வேண்டியதைக் கொடுத்து தன் காரியங்களைப் பல நெறிகெட்ட வழிகளிலும் தொடர்ந்து செய்து, நாட்டின் தொழிலதிபர்களாக மின்னியவர்களும் பலர். மேலும் தொடர்ந்து இவ்வூழல்வாதிகளின் நெறியற்ற நிலைகளையும் செயல்களையும் கூர்ந்து பார்ப்போம். ........................தொடரும்.









No comments: