Tuesday, September 11, 2012

சச்சின் டெண்டுல்கரின் செல்வாக்கு! 

நானும் கிரிக்கெட் விளையாட்டு வீரார் சச்சின் டெண்டுல்கரின் ரசிகன் தான்.  சச்சின் மைதானத்தில் இறங்கி விட்டால், என்னை சுற்றி இருப்பவை, நடப்பவை   அனைத்தையும் மறந்து விடுவேன். ஆனாலும் எந்த ஒரு தனி மனிதரையும்  கடவுள் நிலையில் வைத்துப் பார்ப்பதற்கு என் மனம் என்றும் ஒப்பியதில்லை. எந்த ஒரு மனிதரும் தன துறையில் சாதனைகள் பல ஆற்றியுள்ளார் என்பதற்காக அவர் ஒரு  உன்னத மனிதர் என்று நான் முடிவு செய்ததில்லை. அது தேவையும் இல்லை - என் எண்ணப்படி.

சச்சின் ஒரு தலை சிறந்த  விளையாட்டு வீரர். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னே பல  லட்சங்கள், பற்பல பரிசுகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.  இனாமாக எந்த ஒரு செயலையும் அவர் செய்து விட வில்லை. பல நற்செயல்களை அவர் தனி மனிதனாக செய்து கொண்டிருக்கலாம். அது அவர்தம் தனி மனித விவகாரம்.

ஆனால் அவரை ஒரு கொடையாளி போல், தேச அபிமானி போல், தியாகங்கள் பல செய்தவர் போல் பரிமளித்துக்  காட்டுவதில் எனக்கு எந்த  ஒரு உடன்பாடும்  இல்லை. இப்பொழுது அவர் ராஜ்ய சபா உறுப்பினரும் கூட. என்ன செய்கிறார் என்று பார்ப்போம். 

சச்சின் டெண்டுல்கர்   போன்ற  பல சாதனையாளர்களை நாம்  வானளாவப்  புகழ்ந்துப் பேசும்போது ஒரு  விஷயத்தை நாம் மறந்து விடக்கூடாது. இந்தியாவில் பொழுது போக்கு  அம்சங்கள் இல்லாத,  முழுமையாக  இந்திய நாட்டின்    முன்னேற்றத்திற்காகவும்,  இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இயங்கும் பற்பல துறைகளில் பணியாற்றும் சாதனையாளர்கள்   மாதத்தில் வருமானமாகக் கொண்டு செல்வது சில ஆயிரங்களே. ஆனால் நாட்டிற்காக அவர்கள் ஆற்றும் பணி, அளவிட முடியாதது. 

என்ன செய்வது? பொழுதுபோக்கு விஷயங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நமக்கு உணவளித்து வறுமையில் வாடும் ஒரு ஏழை விவசாயிக்கு நாம் கொடுப்பதில்லை.  நமது கலாசாரம் இன்னும் வளரவில்லை. மாறாகத் தேய்ந்து கொண்டிருக்கிறது.

No comments: