Saturday, September 29, 2012

இந்திய வரலாறு 3

மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின், காங்கிரஸ் தலைவர் பொறுப்பு 1946 ல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நாடகத்தில், இதுவரை நாம் முக்கியமான நான்கு, ஆட்டக்காரர்களைப் பார்த்தோம். அவர்கள் காந்தி, நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத். 

மௌலானா ஆசாத் நான் அல்லது நேரு என்ற இரட்டை ஆட்டம் ஆடினார். நேரு தான் தலைமைப்  பொறுப்பில் இல்லாத பட்சத்தில், எந்த ஒரு இரண்டாவது நிலையிலும் நான் இல்லை, என்கின்ற பிடிவாத ஆட்டம் ஆடினார். என் நிலையினால் காங்கிரஸ் இரண்டு பட்டால், நான் அதற்குப் பொறுப்பு இல்லை என்று சொல்லாமல் சொன்னார். 

சர்தார் படேல் அவர்களின் நிலை அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவாக இருந்தது. நாட்டின் நலத்திற்கு முன்னர் நானும், என் பதவியும் முக்கியமானவை அல்ல. 

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தன நிலைப்பாட்டில் தவறு இருந்ததை நன்றாக உணர்ந்தார் மௌலானா. அவர் சொன்னதாவது: "நானும் சர்தார் படேலும் பற்பல  எண்ணங்களில் மாறுபட்டவர்களாக இருந்தோம். ஆனாலும் அவர் காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்திருந்தால், நேரு செய்த பல தவறுகளைச் செய்திருக்க மாட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியின் அக்காலக் கட்ட கொள்கைகள், திட்டங்கள்  முழுமையாக நிறைவேற்றப் பட்டிருக்கும். அதற்கும் மேலாக, ஜின்னாவிற்கு, காங்கிரசின் திட்டங்களைத் தடம் புரளச் செய்யும் வாய்ப்புக் கிட்டியிருக்காது."

இபோழுது ராஜாஜி அவர்கள் நிலையைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். "இராஜகோபாலாச்சாரி அவர்களுக்கு சர்தார் படேலிடம் இருந்த அதிருப்தி, கோபம், மற்றும் தயவற்ற எண்ணங்கள் அக்காலக் கட்டத்தில் சரியானவையாகவே புலப்படும்." (Prof.Makkhan Lal - Secular Politics Communal Agenda). ஏனென்றால் சர்தார் படேல், முதல் இந்திய ஜனாதிபதிக்கான பொறுப்புக்கு, ராஜாஜிக்கு சாதமாக  நின்றிருக்கவில்லை. 

ஆனாலும் படேல் மறைவுக்கு 22 ஆண்டுகள் பின்னர், ராஜாஜி எழுதினார்: "இந்திய நாட்டுச் சுதந்திர அறிவிப்பு நெருங்கி வரும் காலங்களில், காந்திஜி அமைதியாகக் காய்கள் நகர்த்துபவராக இருந்தார். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் ஜவஹர்லால் நேரு தான் வெளிநாட்டு விவகாரங்களில் ஆழ்ந்த அறிமுகம் கொண்டவர் என்கின்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. எனவே அவர்தான் பிரதமராக வேண்டும் என்கின்ற எண்ணமும் தலைதூக்கி நின்றது. 'அனைவரிலும் அதிக நிர்வாகத் திறமை கொண்டவர் சர்தார் படேல் அவர்களே' என்கின்ற எண்ணம் பின்னுக்குத் தள்ளப் பட்டது 

நேருவை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் சர்தார்  படேல் அவர்களை பிரதமாராகவும் நியமித்திருந்தால் அதுவே  சரியானதாக இருந்திருக்கும். இரண்டு பேர்களில் நேருவே அதிக கூர்மை படைத்தவர் என்கின்ற என் எண்ணம் தப்பானது. சர்தார் படேல் இஸ்லாமியர்களின் மீது  விரோதப் போக்கு கொண்டவர் என்ற தவறான எண்ணம் பரவலாக இருந்தது. இதுவே எங்களின் பாரபட்ச முடிவுகளுக்கு ஆதாரமாக அமைந்தது".














No comments: