Thursday, September 27, 2012

இந்திய வரலாறு 2

நமது இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதற்கு சில வருடங்கள் முன்னே நம் நாட்டில் நடந்தவை, நாட்டின் அளவிலும், உலக அளவிலும், வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள். நாம் ஒவ்வொரு நாட்டுப் பற்று கொண்ட இந்தியனும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம் என்பது என் எண்ணம். 

1937 இல் முஸ்லீம் லீக் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதற்குப் பின் உடனடியாக, பொதுப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், குறிப்பாக ஹிந்து மதத்திற்கு எதிராகவும் ஒரு போர் நிலை கொண்டு பணியாற்றினார். இதுதான் இந்தியாவில், கட்சி அரசியலை, ஜாதி அடிப்படையில் பிரித்து, எதிர்மறை நிலையை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாகும்.

இப்பிரிவினையை, சமநிலைப் படுத்தும் முயற்சியை காந்திஜி மேற்கொண்டார். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு, மௌலானா ஆசாத் அவர்களை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆக்குவதில் முயற்சி கொண்டு வெற்றி கண்டார். அடுத்த ஆறு வருடங்களுக்கு மௌலானா அப்துல் கலாம் ஆசாத் தன்னுடைய பொறுப்பை மிகத் திறமையுடன் நிர்வகித்தார். 

1946 வரையில்  இரண்டாவது உலகப்போர் காரணமாகவும், பெரும்பாலான் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் இருந்ததன் காரணமாகவும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தேறவில்லை. மௌலானா ஆசாத், 1946 ஆம் ஆண்டு வரையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் செவ்வனே  செயல்பட்டார். 

அக்காலக் கட்டத்தில் உலகப்போரும் முடிவடைந்து, இந்தியா தன் சுதந்திரத் தன்மையையும் வெகுவாக எதிர்பார்த்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியமானது. 15 பி.சி.சி. (ப்ராவின்ஷியல் காங்கிரஸ் கமிட்டி) க்களில் 12 பி.சி.சி.க்கள் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களை தேர்ந்தெடுக்க விழைந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அவர்தம் பெயரை முன்மொழிந்தனர். இதற்கு அர்த்தம் மற்ற 3 பி.சி.சி.க்கள், ஜவஹர்லால் நேருவின் பெயரை முன்மொழிந்தனர் என்பதல்ல. சிற்சில காங்கிரஸ் கமிட்டி பிரநிதிகளைத் தவிர, எந்த ஒரு கமிட்டியும் முழு அளவில் அவர் பெயரை முன்மொழியவில்லை என்பதே உண்மை. 

அதற்குப் பிறகு நடந்த உயர் தலைவர்கள் கூட்டத்தில், காந்தி இச்செய்தியை தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தினார். மேலும், நேருவிடம் நேரிடையாகக் கேள்வி எழுப்பினார்: "இந்நிலையில் என்ன முடிவு எடுப்பதென்று?" அமைதி காத்தார் நேரு. அதுவே அவர்தம் ஆழ்ந்த பதிலாக அமைந்தது. 

மௌலானா ஆசாத் தேர்தல் நடந்திடக் கோரினார். ஆனால் காந்தி  நேருவைத் தலைவராக்கிவிட வேண்டுமென்று, ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். வேட்பாளர் பெயர் முன்மொழிதலுக்கான தேதி 29 ஏப்ரல் 1946 அன்று முடிவடைந்திருந்தது. அன்று வரை நேருவின் பெயர் எந்த ஒரு ப்ராவின்ஷியல் கமிட்டியினாலும் முன் வைக்கப்படவில்லை. கிருபளானி நேருவின் சார்பில், தனி உறுப்பினர்களின் பரிந்துரைகளைப் பெறுவதில் மும்முரமாக களமிறங்கினார்.

நேருவின் நிலை தெளிவாக இருந்தது. தன்னால்  எந்த ஒரு இரண்டாவது இடநிலையும் ஒப்புக்கொள்ளப்படாது என்பதில். தலைவர் பதவி இன்றியேல், எந்த ஒரு பதவிக்கும் தயாரில்லை என்பதில் அவர் திட்டவட்டமாக இருந்தார். அதன் காரணமாகவே பெரும் நாடகம் ஒன்று அரங்கேறியது. ஒரே வழி சர்தார் படேல் அவர்களை விலகிக்கொள்ள வைப்பது என்பதுதான் அது. சர்தார் படேல் ஒரு உண்மையான மற்றும் மிகவும் ஆழ்ந்த தேசியவாதி. தனிக்குணம் பெற்ற தலைவர். அவரைப் பொறுத்த அளவில், நாடு ஒரு தனி மனிதரையும் அவர்தம் பதவிகளையும் விட உயர்ந்தது. 

பின்னர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் எண்ணவடிவைப் பார்ப்போம்: மறுபடியும் காந்தி, வசீகரமான நேருவுக்காக, தனது நம்பிக்கைக்குரிய துணைவரைத் தியாகம் செய்தார்.



















No comments: