Thursday, October 1, 2009

கமிஷன் அடிச்சு காணாமல் போனார் கோமல் பட்டாச்சார்யா

எங்க ஊர்ல, அதுதான் மாந்துறைல ஷர்மீளா ஆன்டியத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. ஷர்மீளா ஆண்டி அவ்வளவு கலர், அவ்வளவு அழகு. வெங்கடேசன் மாமா பையன் ராமசுப்பு, வாலிப வயசுல ஒரு வேலையா கல்கத்தா போயிட்டு அங்க ஒரு மூணு நாலு மாசம் தங்கும்படியா ஆயிடுச்சு. அங்க கல்கத்தாவைச் சேர்ந்த ஷர்மீளா மேல லவ்ஸ் ஆயிட்டாரு. அதுக்குப்புறம், வெங்கடேசன் மாமா குடும்பத்தோட கல்கத்தா போயி, சத்தம்போடாம, பையனுக்கு ஷர்மீளாவோட கல்யாணம் பண்ணி மகனையும், மருமகளையும் மாந்துறைக்குக் கூட்டிட்டு வந்துட்டார்.


ராமசுப்புவும், ஷர்மீளாவும் மெட்ராஸ்ல இருந்தாங்க. மாசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவையோ வருவாங்க. வெங்கடேசன் மாமா குடும்பத்துக்கு மாந்துறையுலும், வாளாடியிலும், லால்குடியுலும் ஏகப்பட்ட சொத்து. எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருந்தவர் திடீர்னு ஒரு நாள் மண்டையப்போடவும், ராமசுப்புவுக்கும், ஷர்மீளாவுக்கும் பர்மெனேன்டா மாந்துறை வந்து செட்டில் ஆகும்படியா ஆயிடிச்சு.


இப்ப என்னவோ கல்கத்தா ஆன்டி, தமிழ்ப்பெண்மணி மாதிரி தமிழ்ல பொளந்து கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒருநாள் சமூக சேவை சங்கத்துல முடிவு பண்ணாங்க - பள்ளிக்கூட பசங்கள்லாம் லால்குடில ஸ்கூலுக்குப் போக பஸ் வாங்கலாம்னு. ஒடனே ஷர்மீளா ஆன்டி மும்முரமா இறங்கிட்டாங்க.


அவுங்களுக்கு தூரத்து சொந்தக்காரர், கோமல் பட்டாசார்யான்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு, இந்த பஸ், காரு இதெல்லாம் வாங்கரதுல ரொம்ப வருஷ அனுபவம்னு. டிரங்கால் போட்டு பேசி ஊர் பெரியவங்க அவர வரவழைச்சாங்க. அருமையா பேசினாரு, இங்கிலீஷிலியும், ஹிந்தியிலும். அவுரு பேச்சு புரியாம நிறைய பேரு அவுரா உத்துப்பாத்துக்குட்டு தலையாட்டினாங்க.


அதுக்கப்பறம் என்ன நடந்ததுன்னு நான் சுருக்கமா சொல்றேன்.


எங்க சமூக சேவை சங்கத்துக்கு, புது பஸ்னு சொல்லி, சல்லிக்காசு பெறாத பழைய பஸ்சு ஒண்ண தள்ளி விட்டுட்டார். அதுக்கு கோமல் பட்டாச்சார்யா நெறையா கமிஷன் அடிச்சுட்டதா பேசிக்கிட்டாங்க. அவுருக்கு போன் போட்டுக்கேட்ட அவுரு சொல்றாரு "கல்கத்தாவுக்கு நீங்க வந்து என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்றேன்' .


ஒரு வழியா செலவழிச்சது போரும்னு எங்க சமூக சேவை சங்கம் கேசைத் தூக்கிக் கிடப்பிலே போட்டுடுச்சு.


No comments: