Wednesday, October 14, 2009

சவாலுக்கு சவால்

பதின்மூன்றாம் தேதி தினமலர் படியுங்கள். மாவோவிஸ்டுகள் மூன்று மாநிலங்களில், மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து நேர் சவால் விட்டுள்ளார்கள். அதைத் தொடர்ந்து சாலைகளிலும், ரெயில் வழித் தடங்களிலும், கட்டிடங்களிலும், குண்டு வைத்து நாச வேலைகள் பல செய்துள்ளனர்.


அமைச்சர் சிதம்பரத்தின் பேச்சை கூர்ந்து கவனித்தால் ஒன்று நிச்சயம் புலப்படுகிறது. அவரது பேச்சு நம்பிக்கை மிக்கதாகத் தெரியவில்லை. அவருக்கு இந்நிலைகளைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சரியான வழிகள் புலப்படுவதாகத் தோன்றவில்லை. நிலைமை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இன்னும் மோசமடைந்துவிடும் போல் அச்சம் தோன்றுகிறது. மூன்று மாநிலங்களில் மவோவிஸ்டுகள் விட்ட சவால், செய்த செயல்கள் என் அச்சத்தை உறுதி செய்கின்றன.


அது போகட்டும். இன்றைய இந்நிலைக்கு யார் பொறுப்பு? நாம்தான். நாம் தான் என்றால், நான், நீங்கள் ஒவ்வொரு இந்தியனும். இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக் கிடந்தோம். விடுதலைக்குப்பின்னர், ஊழல் அதிகாரிகளிடமும், ஊழல் அரசியல்வாதிகளிடமும், ஏமாற்று வணிகர் களிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். இது போதாது என்று, பேராசைக்கு அடிமைப்பட்டு வெட்கம் விட்டு, தன்மானம் துறந்து, ஊழல்வாதிகளின் அடி வருடிகிறோம். சுருக்கமாகச்சொன்னால், நாட்டுப் பற்று இழைந்து, கோழைகளாகி, நாம் அனைவரும் மிக மேதுவாகக் கொல்லும் தற்கொல்லி மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.


இதன் பரிணாம வெளிப்பாடுதான் மாவோவி்ஸ்டிகளும், நாக்சலைட்டுகளும், மற்றும் பல தேசிய விரோத அமைப்புகளும். பெரும்பான்மை மக்கள், பொறுமை என்ற பெயரில், மனோபலமின்றி, அநியாயங்களையும், மக்கள் விரோத செயல்களையும், சகித்துப் போவதையும், முடிந்தால் கூட்டு சேர்ந்து தன் சுய லாபம் பார்ப்பதையும், காணச் சகிக்காமல் வெகுண்டு எழும் ஒரு சிலர் இது போன்று இயக்கங்களில் இணைந்து தங்கள் உணர்வுகளை முன்னிறுத்துகிறார்கள்.


அவர்கள் எண்ணத்தால் தேச விரோதிகள் அல்ல. நமது அரசியல் அமைப்பும், அரசு அலுவல்களும், நீதித்துறை செயல்பாடுகளும், பெரும்பான்மை மக்களின் போலித்தனமும், அவர்களை இந்நிலையில் தள்ளியுள்ளன. இவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து ஒவ்வொரு இந்தியனும், தன் சுய லாபங்களுக்கு மேலாக, நாட்டை முன்னிறுத்தி நாட்டுப் பற்றை வளர்ப்பதுதான். நாட்டுப்பற்று மிகுந்த ஒரு சமுதாயம் உருவானால், பற்பல பெருமைகளும், லாபங்களும், ஒவ்வொரு இந்தியனையும் தானே வந்தடையும்.


படைப்போம் ஒரு புதிய சமுதாயம். ஜெய் ஹிந்த்!

No comments: